பால் தாக்கரேக்கு முதல் மரியாதை  செய்யும் மகன்..

மகாராஷ்டிர மாநிலத்தில் ‘சிவசேனா’ என்ற கட்சியை  தொடங்கி சாகும் வரை போராளியாக வாழ்ந்து மறைந்தவர், பால் தாக்கரே.
‘’ ஆட்சியில் தானோ ,தனது குடும்பமோ ஈடுபடாது’’ என்று சங்கல்பம் செய்து , பதவிகளைத் தொலைவில் வைத்திருந்தார், அவர்.
கடைசி வரை அந்த கொள்கையில் உறுதியாக இருந்தார்.
’கிங் மேக்கராக’’ தாக்கரே இருந்தாரே தவிர, அரியணை மீது அவருக்கு ஆசை இல்லை.
தாக்கரே மரணத்துக்கு பின் சிவசேனா தலைவராகப் பொறுப்பேற்ற அவரது மகன் உத்தவ் தாக்கரேவுக்கு தந்தை போலிருக்க மனமில்லை.
கடந்த சட்டசபை தேர்தலின் போது, தனது மகன் ஆதித்ய தாக்கரேயை எம்.எல்.ஏ. தேர்தலில் நிற்க வைத்து, அமைச்சர் ஆக்கினார்.
கொஞ்ச நாட்களில், தானே முதல்- அமைச்சராகவும் மாறினார்.
தந்தையின் கொள்கையை மறந்தாலும், அவருக்குப் பெரிய அளவில் மரியாதை செய்யும் எண்ணம் உத்தவின் ஆழ்மனதில் குடி கொண்டிருந்தது.
இப்போது அதற்குச் சந்தர்ப்பம் வாய்த்துள்ளது.
2020 ஆம் ஆண்டை ‘வேளாண் உற்பத்தி ஆண்டாக’ கொண்டாட , மகாராஷ்டிர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதையொட்டி, விவசாயிகள் பலன் பெறும் வகையில் சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயல் படுத்த திட்டமிட்டுள்ளது, உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு.
அந்த திட்டத்துக்கு ‘பால் தாக்கரே ‘’ பெயர் சூட்டப்படுகிறது.
ஆம்.
’’ பால் தாக்கரே விவசாயிகள் சிறப்புத் திட்டம்’’ என்று அந்த திட்டத்துக்குப் பெயர் சூட்டப்படும் என்று அந்த மாநில வேளாண் துறை அமைச்சர் தாதா பூசே அறிவித்துள்ளார்.
தாக்கரேயின் ஆன்மா , இதை ஏற்றுக்கொள்ளுமா என்று தெரியவில்லை.
– ஏழுமலை வெங்கடேசன்