லக்னோ:

இந்தியா முழுவதும் இப்போது பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக ‘பக்கோடா’ போராட்டம் பரவி வருகிறது.

சமீபத்தில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் மோடி பேட்டி  அளித்தபோது, “நாட்டில் வேலையின்மையைப் பற்றி பேசுகிறார்கள். இந்த சேனலுக்கு வெளியே நின்று இளைஞர்கள் பக்கோடா விற்பனை செய்தால் கூட நாள் ஒன்றுக்கு ரூ. 200 சம்பாதிக்கலாம்” என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.  மேலும் காங்கிரஸ்  உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மோடியின் பேச்சுக்கு  கண்டனம் தெரிவித்துவருகின்றன.

இதற்கிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளில், பட்டம் படித்த இளைஞர்கள் பாஜக அலுவலகம் முன்  பக்கோடா விற்பனை செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி பெங்களூருவில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டபோதும், அங்கு கல்லூரி மாணவர்கள் புதியதாக பக்கோடா கடை ஒன்றை திறந்னர். அவர்கள் பக்கோடா தயார் செய்து அவ்வழியாக சென்றவர்களுக்கு  அளித்தனர்.

“மோடி பக்கோடா, அமித்ஷா பக்கோடா, எடியூரப்பா பக்கோடா,” என முழக்கமிட்டனர். பட்டம் பெறும் போது அணியும் ஆடையை அணிந்து இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.  மோடி வருவதற்கு முன்பாக அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் சமாஜ்வாடி கட்சியினர் பக்கோடா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அசாம் கான் கலந்துக்கொண்டார்.

இதே போல நாட்டின் பிற பகுதிகளிலும் பா.ஜ.க.வுக்கு எதிரான பக்கோடா போராட்டம் பரவி வருகிறது.