புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட பருவநிலை செயல்பாட்டாளர் திஷா ரவிக்கு பிணை வழங்கிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, ரிக் வேதத்தை உதாரணம் காட்டியுள்ளார்.
கூடுதல் செஷன்ஸ் நீதிபதியான தர்மேந்திரா ராணா இதுதொடர்பாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாவது, “5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த நமது நாகரீகம், பல்வேறு தரப்புகளிலிருந்து எழும் மாற்று கருத்துக்களுக்கு மதிப்பளிக்கிறது. நமது தேசத்தின் நிறுவனர்கள், பேச்சுரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரித்து, அதை யாரும் மறுக்கமுடியாத ஒன்றாக வரையறுத்துள்ளனர்.
எனது கருத்துப்படி, பேச்சுரிமை மற்றும் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையானது, உலகளாவிய கவனத்தைக் கவருதலையும் உள்ளடக்கியது. தூண்டல்கள் தவறானவையாக இருக்கலாம், மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது குறும்புத்தன அம்சம் கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால், அதில் திட்டமிட்ட வன்முறை நோக்கம் இருந்தாலொழிய, அதை தேசத்துரோக குற்றமாக கருத முடியாது.
திஷா ரவிக்கான பிணையை மறுப்பதானது, மிகவும் செயற்கைத்தனமாக தெரிகிறது” என்றார் நீதிபதி.
திஷா ரவியைக் கைது செய்தது சட்டவிரோதம் என்றும், டூல்கிட்டில் தேசவிரோத அம்சம் எதுவுமில்லை என்றும் திஷா ரவியின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். ரூ.1 லட்சம் மதிப்பிலான 2 உத்தரவாதங்களின் அடிப்படையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.