புதுடெல்லி: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் இடைக்கால ஜாமின் மனுவை டிஸ்மிஸ் செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த இடைக்கால ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற நிறுவனத்திடம், ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில், ரூ.3,600 கோடி ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, இந்த விவகாரத்தில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை கடந்த 2018ம் ஆண்டு துபாயில், சிபிஐ அதிகாரிகள் கைது செய்து இந்தியா கொண்டு வந்து திஹார் சிறையில் அடைத்தனர்.

அவர் மீதான வழக்கு குறித்த விசாரணை, டெல்லியிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் திஹார் சிறையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், தனக்கு இடைக்கால ஜாமின் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார் கிறிஸ்டியன் மைக்கேல்.

இந்த மனுவை, நீதிபதி முக்தா குப்தா வீடியோ கான்பரன்ஸிங் முறையில் விசாரித்தார். இதில், திஹார் சிறையில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, மைக்கேலின் இடைக்கால ஜாமின் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.