சென்னை: தரமற்ற சாலைகளால் ஏற்பட்ட விபத்துகளில் மட்டும் சென்னையில் 266 வாகன ஓட்டிகள் 2018ம் ஆண்டில் இறந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விவரம் ஒன்றில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தலைநகரத்தில் மற்ற நகரங்களை விட வாகன போக்குவரத்து அதிகம். நகர்ப்புற சாலைகள், புறநகர் பகுதி சாலைகள் என எங்கும், எந்நேரமும் வாகன நெருக்கடி ஏற்படுவதை நாம் சகஜமாக பார்க்கலாம்.
அந்தளவுக்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் வேளையில் மோசமான சாலைகளால் விபத்தை சந்தித்து உயிர்விட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 2018ம் ஆண்டில் 266 பேர் என்று புள்ளிவிவரம் ஒன்றில் தெரிய வந்திருக்கிறது.
இந்த புள்ளி விவரத்தை தேசிய குற்ற ஆவண காப்பகமானது வெளியிட்டு உள்ளது. 266 பலியானது ஒருபுறம் இருக்க, அவர்களில் 62 பேர் கவனக் குறைவாக ஓட்டி தமது உயிரை பறிகொடுத்துள்ளனர் என்றும் அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தி. நகர் நல்வாழ்வு சங்க நிறுவனர் வி.எஸ். ஜெயராமன் கூறி இருப்பதாவது: அரசாங்க நிறுவனங்களால் தோண்டப்படும் சாலைகள் பின்னர் கவனிக்கப்படாமல் விடப்படுகிறது.
கவனக்குறைவால் அந்த சாலைகள் போதிய அளவில் சீரமைக்கப்படுவது கிடையாது. அதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி உயிரை பறிகொடுக்கின்றனர் என்றார்.
இது குறித்து பேசிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள், ஒவ்வொரு பருவகாலத்துக்கு முன்பும் 120 கோடி ரூபாய் சாலைகள் பராமரிப்புக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அப்படி தான் இதுவரை 4,000 குழிகள் மூடப்பட்டுள்ளன என்று கூறுகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சீனிவாசன் கூறுகையில், எப்ஐஆரில் உண்மையான தகவல்களை காவல்துறை தெரிவித்துள்ளது என்பதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த வருடம், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இருவர் இதன் காரணமாக சஸ்பென்ட் செய்யப்பட்டனர் என்றார்.
சென்னை போக்குவரத்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சாலைவிதிகள் பற்றி குறைந்த அளவே விழிப்புணர்வே வாகன ஓட்டிகளிடம் இருக்கிறது. நோ பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தப்படும் வண்டிகளின் எண்ணிக்கையை பாருங்கள் என்று கேள்வி எழுப்பினார்.