சென்னை
தமிழகத்தில் கொரோனா விதிமுறைகள் மீறல் குறித்த 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்பட்டது குறித்த ஒரு செய்திக் குறிப்பு இதோ
கடந்த வருடம் மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல் நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. மக்கள் வெளியே நடமாடினால் கொரோனா பரவல் அதிகமாகும் என்னும் எண்ணத்தில் அது அமலாக்கப்பட்டது. ஆயினும் மக்களில் சிலர் இதை மதிக்காமல் கும்பல் கும்பலாகச் சாலைகளின் சென்றனர். அவர்களைப் பிடித்த காவல்துறையினர் தொற்று நோய்த் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர்.
நாடெங்கும் உள்ள மக்கள் ஊரடங்கு காரணமாக முடங்கிக் கிடந்த போது பல இளைஞர்கள் வேண்டுமென்றே வெளியே திரிந்தது நினைவிருக்கலாம். அப்போது கொரோனா எங்கிருக்கு என எனக்குக் காட்டினால் நான் ஊரடங்கைக் கடைப்பிடிப்பேன் எனப் பிடிவாதம் செய்த இளைஞர் ஒருவரை நம்மால் மறக்க முடியாது. இது போன்றவர்களை பிடித்த காவல்துறையினர் தோப்புக்கரணம், பிரம்படி என தண்டனைகள் வழங்கினர்.
டிரோன்கள் மூலம் கண்காணிப்பு நடந்ததால் டிரோனை பார்த்ததும் பலர் ஓடி ஒளிந்த காட்சிகள் வெளியாகின. ஒதுக்குப்புறங்களில் கேரம் போர்ட் விளையாடும் போது டிரோனை பார்த்த இளைஞர்கள் துண்டை காணோம் துணியைக் காணோம் என இடுப்புத் துணி அவிழ ஓடி ஒளியும் நிலை உண்டாகியது. தற்போது முதல்வர் இந்த வழக்குகள் ரத்து செய்யப்படும் என அறிவித்ததால் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் இவற்றில் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தவர்கள், வேண்டுமென்றே விருந்து நடத்தியவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட மாட்டாது என தெரிய வந்துள்ளது. அத்துடன் வீட்டிலேயே சாராயம் காய்ச்சியவர்கள் எனப் பதியப்பட்ட வழக்குகளுக்கும் தள்ளுபடி கிடையாது எனக் கூறப்படுகிறது. ஒட்டு மொத்த வழக்கில் இவற்றின் தீவிரம் தெரியாமல் போய்விடும் என்பதால் மற்ற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகப் பெயர் தெரிவிக்க விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.