ராஞ்சி: அண்மையில் முடிவடைந்த ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல்கள் தலைவர்கள் சந்தர்ப்பவாதிகளாவதையும் கட்சிகள் ஆச்சரியமான கூட்டணிகளை உருவாக்கும் திருப்பங்களையும் கண்டன. ஆனால் மாநிலத்தில் இன்னும் சில மாற்றங்கள் நடைபெற்று வருவதால் அரசியல் வட்டாரங்கள் தொடர்ந்து பரபரப்பில் இருப்பதாகத் தெரிகிறது.
முன்னாள் முதலமைச்சரும், ஜே.வி.எம் (ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா) தலைவருமான பாபுலால் மராண்டி பாரதிய ஜனதாவில் இணைந்து அதன் மாநிலத் தலைவராகவும், ‘எதிர்க்கட்சியின் முகம்’ ஆகவும் வாய்ப்புள்ளது என்று நியூஸ்ட்டுடன் பேசிய பெயர் கூற விரும்பாத ஒரு தகவல் வட்டாரம் தெரிவிக்கிறது.
பாஜக மற்றும் மராண்டி இருவருக்கும் இது ஒரு சாதகமான சூழ்நிலையாக இருக்கும், சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர், பாஜக ஜார்க்கண்டின், சாந்தல் பிராந்தியத்தில் ஒரு வலுவான அனைவருக்கும் பரிச்சயமான பழங்குடி முகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது. பாஜகவின் மற்ற பழங்குடி முகமான அர்ஜுன் முண்டா, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் கட்சியால் சிறப்பாக செயல்பட முடியாத கோல்ஹான் பிராந்தியத்தில் அவரது செல்வாக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் முடிவை பாஜக ஜனவரி 14 வரை ஒத்திவைத்தபோது மராண்டி ஜே.வி.எம்-ஐ காவி கட்சியுடன் இணைப்பார் என்று சமீபத்திய வதந்திகள் பரவின.
மராண்டிக்கு இருக்கம் ஒரு சிறிய பிரச்சனை என்னவென்றால், மற்ற இரண்டு ஜே.வி.எம் எம்.எல்.ஏக்கள், அவருடன் செல்ல வேண்டாம் என்று தேர்வு செய்யலாம். அவரது இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களான பிரதீப் யாதவ் மற்றும் பந்து டிர்கி ஆகியோர் காவி கட்சியில் சேரத் தயங்குவதால் ஜே.வி.எம் பாஜகவுடன் இணைவதை தாமதப்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.