சென்னை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்தியஅரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் குற்றவாளிகளாக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவர்களில் 17 பேர் ஏற்கனவே இறந்து விட்டதால், மீதமுள்ள 32 பேர் மீது லக்னோவில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கும் அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பின் போது பிரச்னைகள் ஏற்படும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என்றும், பொது இடங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவை தொடர்ந்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கோயில் மற்றும் மசூதிகள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி 12 காவல் மாவட்டங்களில் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள், பொழுது போக்கு பூங்காக்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் சுற்றி வந்தால் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.