லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி உள்பட 32 பேர் விடுதலையை எதிர்த்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
உ.பி. மாநிலம் அயோத்தில் ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டிருந்த பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ந்தேதி, இடிக்கப்பட்டது. இந்த மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. அப்போது, பாஜக தலைவர்கள் அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்ளிட்ட 13 பேர் மீது சதி குற்றச்சாட்டப்பட்டது. மொத்தத்தில் 32 பேர் மீது சிபிஐ குற்றச்சாட்டுக்களை சுமத்தியது.
ஆனால், அலகாபாத் கோர்ட்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, முகாந்திரம் இல்லை என வழக்கில் இருந்து அவர்களை விடுதலை செய்தது. ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு, நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், அலகாபாத் கோர்ட்டும் அவர்களை விடுவித்தது. பின்ன்ர சி.பி.ஐ. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை மேல்முறையீடு செய்யப்பட்டது. அதையடுத்து, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு பல்வேறு நீதிமன்றங்களில் கடந்த, 28 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு (2020) செப்டம்பர் 30ந்தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட செயல் திட்டமிடப்பட்ட செயல் இல்லை என்றும், அவை திடீரென நடைபெற்ற நிகழ்வு என்றும் , இந்த வழக்கில், அத்வானி, ஜோஷி, உமாபாரதி உள்பட 32 பேரும் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், மற்றவர்களைத் தடுக்க முயன்றதாகவும், ஆனால், அவர்களை மீறி மசூதி இடிக்கப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் பக்கங்களைக்கொண்ட தீர்ப்பில், 600க்கும் மேற்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதி கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து, சி.பி.ஐ., தரப்பில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. இந்த நிலையில், அயோத்தியில் வசிக்கும், ஹாஷி மஹபூப், ஹாஜி சையத் அக்லக் அஹமது ஆகியோர், சி.பி.ஐ., நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர்.