புவனேஸ்வர்
ஒரிசா மாநிலத்தில் பிஜுஜனதா தளம் கட்சி தனது வேட்பாளராக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் ஒருவரைதேர்வு செய்துள்ளது.
ஏழைப் பெண்களுக்காக பல சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. சுய உதவிக் குழுக்கள் என்பது 15- 20 உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சிறு சேமிப்பு மூலம் பணம் சேர்த்து அந்த பணத்தை கடனாக வழங்குவதாகும். இந்த குழு பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களுக்காக அவர்களாலேயே அழைக்கப்படும் குழு ஆகும்.
ஒரிசா மாநிலத்தில் மொத்தம் 21 மக்களவை தொகுதிகள் உள்ளன. அவற்றில் ஒன்று அஸ்கா மக்களவை தொகுதி ஆகும். இந்த தொகுதிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசிப்பவர் பிரமிளா பிசோய். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள இவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கருக்கும் குறைவான விளை நிலம் மட்டுமே உள்ளது.
பிரமிளா தனது பகுதியில் உள்ள பெண்களை இணைத்து ஒரு சுய உதவிக் குழுவை அமைத்து அங்குள்ள பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வருகிறார். பிஜு ஜனதா தளம் கட்சி இவரை அஸ்கா மக்களவை தொகுதிக்கு வேட்பாளராக தேர்வு செய்துள்ளது.
பெரும்பாலும் செல்வந்தர்கள் மட்டுமே தேர்தல் வேட்பாளராக போட்டியிடும் வேளையில் ஒரு ஏழை பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒரிசா மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.