அழகர் திருக்கோவில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இருக்கும் அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். இக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்றாகும்.
இந்த மலையில் திருமால், “அழகர்”ன்ற பெயரில் கோவில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது. இதற்குத் திருமாலிருஞ்சோலை, உத்யான சைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, விருஷபாத்திரி அல்லது இடபகரி முதலிய பல பெயர்கள் உண்டு.
இது கிழக்கு மேற்காக 18 கி.மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது. அதிலிருந்து பல சிறிய மலைகள், நாலா பக்கமும் பிரிந்து போகின்றன. இதன் தென்புறம் அடிவாரத்தில் தான் அழகர் கோவில் இருக்கிறது. இம்மலையில் பலவகை மரங்களும், செடிகொடிகளும் பச்சைப்பசேலெனக் காட்சியளிக்கின்றன. இதில் இயற்கையாகவே பல சோலைகள் அமைந்திருப்பதால் இதைச் சோலைமலை, திருமாலிருஞ்சோலை, வனகிரி, எனச் சொல்லப்படுகிறது.
இந்த கோவிலை சுற்றி நிறைய வளர்ச்சிப்பணிகள், மாற்றங்கள் எல்லாம் நடந்ததிருக்கு. இந்த கோவிலின் காலம் சரியாக தெரியவில்லை என்றாலும் இந்த திருக்கோவிலை பாண்டிய மன்னர்கள் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. கி.பி 1251 முதல் 1563 வரை இந்தத் திருக்கோவில் பாண்டிய மன்னர்களின் வசம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்த திருத்தலம் இரண்டு கோட்டைகளால் சூழப்பட்டு இருக்கு. கோவில் அமைந்துள்ள உட்கோட்டை இரணியங் கோட்டை எனவும், வெளிக்கோட்டை அழகாபுரிக் கோட்டை எனவும் சொல்லப்படுகிறது. நாட்டுப்புறப் பாடல்களில் உட்கோட்டையை நலமகராசன் கோட்டை என்று இத்தலத்தினைப் பெரியாழ்வார் பாடுவதால் அவர் காலத்திலேயே இக்கோவிலைச் சுற்றி ஒரு மதில் இருந்திருக்க வேண்டுமென தோன்றுகிறது. இங்குள்ள வெளிக்கோட்டை கி.பி. 14 – ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை அரசாண்ட வானாதிராயர்களால் கட்டப்பட்டது.
பெரியாழ்வார் குறிப்பிடும் மதில் இரணியம் கோட்டை எனப்படும் உட்கோட்டை மதிலாகும். இதற்குள் பண்டைக்காலத்தில் பிள்ளைப் பல்லவராயன் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட அக்கிரஹாரம் ஒன்று இருந்தததாம். அது சமாந்தநாராயண சதுர்வேதமங்கலம் என்ற பெயருடன் அழைக்கப்பட்டதாம். வெளிக்கோட்டைப் பகுதியில் தேர் மண்டபம் இருக்கு.
தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொடு்த்த அழகருக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக முடி காணிக்கை தருகின்றனர். எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தானியங்கள் ஆகியவற்றை தருகின்றனர். இத்தலத்தில் துலாபாரம் மிகவும் சிறப்பு. பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள், துளசி தளங்கள், பூக்கள் பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து அழகருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.