சபரிமலையில் இன்று காலை தமிழகத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட நெற்கதிர்களை கொண்டு, நிறைப்புத்தரிசி பூஜை நடைபெற்றது.
கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் மலையாள வருடப் பிறப்பிற்கு முன்பு அனைத்துக் கோயில்களிலும் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் நிறைபுத்தரிசி பூஜை பிரசித்தி பெற்றதாகும். இதில், அறுவடை செய்யப்படும் முதல் நெற்கதிர்களை சுவாமிக்கு படைத்து வழிபடுவது ஐதீகம். இந்த பூஜைக்காக ஆண்டுதோறும் தமிழகத்தின் செங்கோட்டை அருகே பண்பொழியில் உள்ள அச்சன்கோயிலுக்குச் சொந்தமான வயலில் தனியாக நெல் பயிரிடப்பட்டு, அந்த நெற்கதிர்களை அறுவடை செய்து, அச்சன்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும்.
நிகழாண்டு இந்த நிகழ்வையொட்டி, 51 நெற்கதிர் கட்டுகளை சபரிமலை கோயில் நிர்வாகத்தினரும், ஐயப்பன் திரு-ஆபரண பெட்டி வரவேற்புக் குழுவினரும் இணைந்து கேரள மாநிலத்துக்கு எடுத்துச் சென்றனர். நெற்கதிர்கள் கொண்டுசெல்லப்பட்ட வாகனத்துக்கு கோட்டைவாசலில் அமைந்துள்ள கருப்பசாமி கோயில் முன் தமிழக – கேரள பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர், ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு சபரிமலைக்கு நெற்கதிர்கள் அனுப்பப்பட்டது.
இன்று அதிகாலை சபரிமலைக்கு வந்தடைந்த நெற்கதிர்களை பெற்றுக்கொண்ட தலைமை நம்பூதிரி, நிறைப்புத்தரிசி பூஜையை நடத்தினார்.
இந்நிகழ்வில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்துக்கொண்டு, சரண கோஷமிட்டு, சுவாமியை வழிபட்டனர்.