அயோத்தியில் நேற்று பெய்த மழையில் அந்நகரத்தின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ராம் மந்திர் செல்லும் ராம் பாத்-தின் பல இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

தவிர, ராமர் கோயிலின் மேற்கூரையில் மழை நீர் ஒழுகியதை அடுத்து அந்த மழை நீர் மூலஸ்தானத்தில் உள்ள ராம் லல்லா சிலை மீது விழுந்ததோடு அல்லாமல் ராமர் கோயிலின் உள் பிராகாரத்தில் தேங்கி நின்றது.

இந்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட்ட ராமர் கோயிலின் கட்டுமானம் அவசரகதியில் நடைபெற்ற நிலையில் கட்டுமானத்தின் தரம் குறித்து உள்ளூர் மக்கள் கேள்வியெழுப்பி வந்தனர்.

மேலும், நகரின் முக்கிய சாலைகளில் அம்ருத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் நிறைவடைந்த பின்னும் சாலைகள் சீரமைக்கப்படாததால் பல சாலைகளில் மழை நீரில் சேறும் சகதியுமாக காணப்பட்டது.

பருவமழை துவங்குவதற்கு முன்பே இந்த நிலை ஏற்பட்டிருப்பதை அடுத்து பெருமழைக்கு ராமர் கோயிலும் அயோத்தி நகரமும் என்ன ஆகுமோ என்று உள்ளூர் மக்கள் குமுறுகின்றனர்.

தேர்தலை மையப்படுத்தி அயோத்தி மற்றும் ராமர் கோயில் திறப்பு விழா ஆகியவற்றை பாஜக எழுப்பிய நிலையில் இதற்கு அந்த தொகுதி மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் கொடுத்தனர்.

தேர்தலுக்கு பின் ஸ்ரீராமரை மோடி உள்ளிட்ட பலரும் கைவிட்ட நிலையில் ராமர் கோயில் மூலஸ்தானத்தில் மழை நீர் சொட்டியது ராமர் கோயில் கர்ப்பகிரஹம் புனரமைக்கப்பட்டு மீண்டும் சிலை பிரதிஷ்டை நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.