சென்னை:

யோத்தி தீர்ப்பை எதிர்த்து, தடையை மீறி சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, வேல்முருகன், திருமாவளவன், திருமுருகன் காந்தி உள்பட 26 பேர் மீது சென்னை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2,77 ஏக்கர் நிலமான ராமஜென்ம பூமி யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக கடந்த 500 ஆண்டுகளாக நீடித்து வந்த வழக்கில்,  கடந்த 9ம் தேதி உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும் என்றும், முஸ்லீம்கள் மசூதி கட்டுவதற்கு அயோத்தியில் வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று கூறியது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று, தமிழக பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்,  தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்எல்ஏ.,  மமக தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி, எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது, பச்சை தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமார், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் முகமது இஸ்மாயில், தமிழ் பேரரசு கட்சி தலைவர் இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அமைப்பு மற்றும் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி  பேசினர்.

இவர்கள்   26 பேர் மீதும் திருவல்லிக்கேணி போலீசார் சட்டவிரோதமாக கூடுதல், அத்துமீறி நடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.