டில்லி:
அயோத்தி வழக்கில் இஸ்லாமிய அமைப்புக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக, மிரட்டல் விடுத்த நபருக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்பின ரும் உரிமை கோருகின்றனர். இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இதில், மனுதாரர் எம் சித்திக் மற்றும் அகில இந்திய சுன்னி வக்ஃப் வாரியத்தை பிரதிநிதித்து வப்படுத்தும் வழக்கறிஞராக பிரபல வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதாடி வருகிறார்.
அவருக்கு, அயோத்தி வழக்கில் முஸ்லிம் அமைப்பின் சார்பில் ஆஜராகக் கூடாது என்று மிரட்டல் வந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, உச்சநீதி மன்றத்தில் ராஜீவ் தவான் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில், ஆகஸ்ட் 14-ம் தேதி அன்று சண்முகம் என்ற ஓய்வுபெற்ற கல்வி அதிகாரியிடம் இருந்து மிரட்டல் கடிதம் வந்ததாகவும், ராஜஸ்தானைச் சேர்ந்த சஞ்சய் கலால் பஜ்ரங்கி என்பவர் வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதேபோன்று வீட்டில் இருக்கும் நேரங்களிலும், நீதிமன்ற வளாகத்திலும் என்னை அச்சுறுத்தும் தொனியில் சிலர் நடந்து கொள்கிறார்கள், இது எனது கடமையைச் செய்வதற்கு இடையூறாக உள்ளது, எனவே, உச்சநீதி மன்றம் தாமாக முன்வந்து அரசமைப்புச் சட்டத்தின் 129 மற்றும் 15 ஆகிய பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானை அச்சுறுத்தியதாக இரண்டு நபர்களுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.