டில்லி:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் விவகாரம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் 10ந்தேதி முதல் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக வரும் 10ந்தேதிக்குள் விசாரணை நீதிபதிகள் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் கடந்த 4ந்தேதி தெரிவித்திருந்த நிலையில், தற்போது வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன பெஞ்ச் அறிவிக்கப்பட்டு உள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்த அமர்வில், நீதிபதிகள், எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரும் இடம்பெறுவர்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசியல் சாசன அமர்வு வரும் 10ந்தேதி முதல் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்க உள்ளது.
பாபர் மசூதி இருந்த இடம், ராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் கூறி வருகின்றனர். இந்த இடம் தொடர்பான சர்ச்சை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இது தொடர்பான வழக்கில் நிலத்தை மூன்றாக பிரித்து ராமர் கோவில், இஸ்லாமிய வக்ஃபு வாரியம், நிர்மோகி அகரா இந்து அமைப்பு ஆகியவற்றுக்கு பிரித்து வழங்க கடந்த 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அதை ஏற்காக பல அமைப்புகள், தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. இந்த வழக்கு நாளை முதல் உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.