சென்னை:  பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்வில்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக காவல்துறையில் பெண்காவலர்கள் இணைக்கப்பட்டதன் பொன்விழா சென்னையில் நடக்கிறது. நிகழ்ச்சியில் சிறப்பு தபால் தலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னையில், நேரு உள் விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.   நிகழ்ச்சியில்  சிறப்பு தபால் தலையையும் வெளியிட்ட முதலமைச்சர் .  ரூ. 8.5 கோடி செலவில் பெண்கள், குழந்தைகள் விழிப்புணர்வுக்கான “அவள்” திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர்,   ‘1973 ஆம் ஆண்டில் தமிழ்நாடு காவல் படையில் பெண்கள் இணைக்கப்பட்டனர். முதன்முதலாக பெண்களை காவலராக உருவாக்கி அவர்கள் கையில் துப்பாக்கி கொடுத்தார் கருணாநிதி. இது பொன்விழா அல்ல பெண்விழா. எனது பாதுகாப்புக்காக பெண் காவலர்களை நிற்கவைக்க வேண்டாம் என உத்தரவிட்டேன். காவலர்களின் வீர செயல்களை பார்த்து வியந்தேன். தமிழக காவல்துறையில் அனைத்து நிலைகளிலும், 35,329 பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்கள், பெண்கள் மீதான பார்வையை மாற்றிக் கொள்ளவேண்டும்.

பெண் காவலர்கள் காவல் பணியோடு, குடும்பப் பணியையும் சேர்த்து பார்த்து வருகின்றனர். ஆண் காவலர்களுக்கு ஒரு சல்யூட் என்றால், பெண் காவலர்களுக்கு இரண்டு சல்யூட். மேலும் பெண் காவலர்களுக்காக 9 அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொன்விழா என்று சொல்லப்பட்டாலும் இது பெண்களுக்கான விழா. பெண்கள் உயர் கல்வி பெற்று உயரிய பதவியை வகிக்க வேண்டுமென கூறியவர் கலைஞர். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே காவலர்கள் பிரச்சினைக்கு குரல் கொடுத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. கலைஞர் தொலை நோக்கு திட்டத்தால் இன்று 34,000 பெண் காவலர்கள் பணியாற்றுகிறார்கள். முதல்வர் என்ற முறையில் எனக்கான பாதுகாப்பு படையில் பெண்கள் உள்ளனர்

பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வரவேண்டும், அவர்கள் மேடைகளில் முழங்க வேண்டும் என்று கூறியவர் அண்ணா. தமிழ்நாட்டில் 35000 பெண் காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்றால் அதற்கான விதையை விதைத்தவர் கலைஞர் எனவும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மகளிர் காவலர்களுக்கு நவரத்ன அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார், அதன் விவரம் வருமாறு:-

  1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம்.
  2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி.
  3. காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை.
  4. காவலர்களின் குழந்தை காப்பகங்கள் மேம்படுத்தப்படும்.
  5. கலைஞர் காவல் கோப்பை விருது.
  6. குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல்.
  7. பெண்களுக்கு தனி துப்பாக்கி சுடும் போட்டிகள்.
  8. ஆண்டுதோறும் பெண் காவலர்களுக்கு தேசிய மாநாடு.
  9. பணி ஆலோசனை குழு அமைக்கப்படும்.