சென்னை: அதிமுக பொதுக்குழுகூட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்ற ஓபிஎஸ் கோரிக்கையை ஆவடி மாநகர காவல்துறை நிராகரித்துள்ளது. தனி நபரின் உள் அரங்கத்தில் கூட்டம் நடப்பதால் தடுத்து நிறுத்த முடியாது என பதில் அளித்துள்ளது.
அதிமுக இரட்டை தலைமைகளுக்குள் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக எழுந்துள்ளதால், இபிஎஸ், ஓபிஎஸ் இடையே யார் பெரியவர் என்பதை நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுகுழுவில் நிரூபிக்க முயற்சித்து வருகின்றனர். இதனால், இருவரது ஆதரவாளர்களும், சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். தற்போதைய நிலையில் எடப்பாடிக்கே பொதுக்குழுவில் ஆதரவு அதிகம் இருப்பதால், ஓபிஎஸ், பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால், அதை ஏற்க எடப்பாடி தரப்பு மறுத்துவிட்டதால், ஆவடி காவல்துறையில் ஓபிஎஸ் தரப்பு, பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி கடிதம் கொடுத்தது.
அந்த கடிதத்தில், அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை வெடித்துள்ளது.இதனால்,இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும்,கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை காவல் துறைக்கு உள்ளது என்றும் கூறி,பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது என்று கூறி ஓபிஎஸ் கையெழுத்துடன் கூடிய மனு ஆவடி காவல் ஆணையரகத்தில் நேற்று கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில்,ஓபிஎஸ் கோரிக்கையை ஆவடி காவல்துறை நிராகரித்துள்ளது.பொது இடத்தில் நடைபெற்றால் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதி தரவோ, மறுக்கவோ முடியும் என்றும், மாறாக உள் அரங்கத்தில் நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது என்று கூறி காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு போதிய பாதுகாப்பு தரப்படும் என்றும் ஆவடி காவல்துறை தெரிவித்துள்ளது.