சென்னை: பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வசதிகளை தமிழ்நாடு அரசு செய்வது வருவதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரேத பரிசோதனை அறிக்கை பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள், கால தாமதங்களை தவிர்க்கும் வகையில், நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், பிரேத பரிசோதனை ஆறிக்கைகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, அதை சம்பந்தப்பட்டவர்கள் பதிவிறக்கும் செய்வும் வகையில், இணையதள பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில், தற்கொலை, சாலை விபத்து, சந்தேக மரணம், கொலை போன்வை காரணமாக உயிரிழப்பவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில்  உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அதன்பிறகே சம்பந்தப்பட்டவர்களின் உடல் அவரது குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்படுகிறது. இதுபோன்ற சந்தே மரணங்களில் இறந்தவர்களின் பிரரேத பரிசோதனையின்போது  நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படுகிறது.  பொதுவாக மருத்துவமனை தரப்பில்   24 மணி நேரத்தில் தயார் செய்யப்பட்டுவிடும் என கூறப்பட்டாலும், அதை அதற்குரிய மருத்துவர்கள் செக் செய்து கையெழுத்து இடுதல் உள்பட பல்வேறு காரணங்களால், அவை கிடைப்பதில்   தாமதமாகிறது. மேலும் காவல்துறையினராலும் தாமதங்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிரேத பரிசோதனை அறிக்கையை குறிப்பிட்ட காலத்திற்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்கும் வகையில்,  உடற்கூறாய்வு அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் உடனே இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் டவுன்லோடு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. மேலும்,  இதன்மூலம், தாமதம், ஊழல், சட்டவிரோத செயல்கள் என அனைத்தும் தவிர்க்கப்படும் என கூறியது.

இதையடுத்து,    பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் சோதனை முறையில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக, ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். விரைவில் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் உடனுக்குடன் பதிவிறக்கம் செய்யும் வசதி பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம் 24 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்கப்படும். இந்த அறிக்கையை கோர்ட்டு மற்றும் போலீசார் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். பிரேத பரிசோதனை அறிக்கை இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவைப்பட்டால் அவர்கள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு நேரடியாக சென்று தங்கள் சான்றிதழ்களை காண்பித்து அறிக்கையை பெற்றுக்கொள்ளலாம்.

பாதுகாப்பு கருதி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் அனுமதி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை. இந்த புதிய வசதியின் மூலம் பிரேத பரிசோதனை அறிக்கை பெறுவதில் உள்ள தாமதம் முற்றிலும் தவிர்க்கப்படும். இந்த வசதி நடைமுறைக்கு வந்த பிறகு தற்போது போலீசார் நேரில் வந்து பிரேத பரிசோதனை அறிக்கை வாங்கும் நடைமுறை முற்றிலும் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.