சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் இறங்கும் இடத்தை தெரிவிக்கும் வகையில், அடுத்த நிறுத்தம் பற்றிய ஒலி அறிவிப்பு திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. மின்சார ரயில்களை போலவே, சென்னை பேருந்துகளிலும் அடுத்த நிறுத்தம் பற்றிய அறிவிப்பு பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம் மாநகர பேருந்துகளில் இன்று முதல் துவக்கப்படுகிறது
சென்னை மாநகர பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால், பயணிகள் இறங்கும் இடத்தை தவறவிடும் நிகழ்வு அடிக்கடி நடைபெற்று வருகிறது. மேலும், புதிதாக பயணம் செய்பவர்கள் தாங்கள் இறங்கும் இடம் எது என தெரியாத நிலையும் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற தவறுகளை களையும் வகையில், சில பேருந்துகளில், நடத்துனர்கள் பேருந்து நிறுத்தம் பெயரை அறிவித்து, பயணிகளுக்கு தெரியப்படுத்துவர். ஆனால், பெரும்னாலா நடத்துனர்கள் பேருந்து நிறுத்தம் குறித்து ஏதும் தெரிவிப்பது இல்லை.
இந்த நிலையில், பேருந்து நிறுத்தம் தொடர்பான அறிவிப்புகளை பயணிகளுக்கும் தெரிவிக்கும் வகையும், தானாகவே ஒலிக்கும் வகையும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய அமைப்பு இன்று செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் இதற்காக முதற்கட்டமாக புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பாளர் என்கிற ஜிபிஎஸ் மூலம் பேருந்து நிறுத்த ஒலி அறிவிப்பு திட்டம் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது .
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடுத்து வரக்கூடிய பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பு பேருந்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்பீக்கர் மூலம் பயணிகளுக்கு தெரிவிக்கப்படும். பேருந்து நிறுத்தத்திற்கு 300 மீட்டர் முன்பாகவே பேருந்து நிறுத்தத்தின் பெயர் குறித்த தகவல் ஒளிபரப்பப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்திருக்கிறது.