srilanga
டொனமூர் அறிக்கை கட்டத்தில் தமிழர் தலைமை இனவாரி பிரதிநிதித்துவத்தைக் கோரியதுதான் இலங்கையில் இனவாதம் தலையெடுக்க வழிசெய்தது. அதன் பின்னர் அரசியல் தொடர்ந்து சீரழிந்தது. இரு தரப்பிலும் இனவாதம் மேலோங்கியது.
பிரபல சிங்கள் வழக்கறிஞர் ஃபிரான்சிஸ் டி சொய்சா ஒரு கூட்டத்தில் பேசுகையில், ”இலங்கை சிங்களருக்கே என்ற அணுகுமுறையினை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தக் கூட்டம் சிங்கள மஹா சபையினரால் நடத்தப்படுகிறது என்று தெரிந்திருந்தால் இங்கு வந்திருக்கவே மாட்டேன். நானும் சபாவில் சேர்ந்து இனவாதம் பேசினால் சட்ட அவைக்குத் தேர்ந்தெடுக்கப்படக்கூடும். ஆனால் அதைவிட எனக்கு முக்கியமான கடமை வேறு இருக்கிறது. இந்த நாட்டின் நன்மைக்காக நான் பாடுபடவேண்டும்,” என ஆணித்தரமாக, தனக்கு முன் பேசிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயகாவிற்கு கண்டனம் தெரிவித்தார்.
ஆனால் அத்தகைய நேர்மையான பக்கசார்பு எடுக்காத முன்னேற்றக் கருத்துக்களுடைய சிங்களரைக்கூட தமிழர் தரப்பு அங்கீகரிக்கத் தயாரில்லை.
மலையகத்தாரையும் சேர்த்து கணக்கில் காட்டி, தமிழர்களும் சிங்களர்களும் 50க்கு 50 என்ற விகிதாச்சாரத்தில் சட்ட அவை இடங்களை பகிர்ந்துகொள்ளவேண்டும் என வாதாடிய ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதனை ஆதரித்தார் என்பதைக் கடந்த பகுதியில் பார்த்தோம். பிரதமர் சேனநாயகாவிற்குக் காட்டிய விசுவாசத்திற்கு பரிசாக ஜிஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அவரது துரோகச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் காங்கிரஸ் தலைவர்கள் எஸ் ஜே வி செல்வநாயகம், வன்னியசிங்கம் மற்றும் நாகநாதன் ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறி, தமிழரசுக் கட்சி என அறியப்படும் ஃபெடரல் கட்சியைத் துவக்கினர்.
.இளைஞர் காங்கிரஸ் இன ரீதியாக அல்லாமல் அரசியல் ரீதியாக தமிழர்களை அணி திரட்டினர். அந்த அணுகுமுறை தொடர்ந்திருந்தால் இனப்போர் மூண்டிருக்காது. ஆனால் சிங்களரை எதிரிகளாகவே சித்தரித்து வந்த பொன்னம்பலனாரின் தாக்கம்தான் தமிழரசுக் கட்சித் தலைவர்களிடம் மேலோங்கியிருந்தது.
ட்ராட்ஸ்கிய சிந்தனையாளர் காராளசிங்கம் குறிப்பிடுகிறார்: ”திடசித்தமுடைய ஃபெடரல் தலைமை, ஏகோபித்த மக்கள் ஆதரவு, எல்லாம் இருந்தும் இலட்சியங்களை அடையமுடியவில்லை, தொடர்ந்து தமிழர்கள் தோல்வியையும் அவமானத்தையுமே சந்தித்தனர். ஏன்? தனியாகவே போராடி உரிமைகளை, அதிகாரங்களை வென்றுவிடமுடியும் என ஃபெடரல் தலைமை தவறாகக் கணித்ததுதான்.
“சோஷலிசத்திற்கான தொழிலாளர் முன்முயற்சிகளும், தமிழர்களின் போராட்டங்களும் இணையவேண்டும். அப்போது மார்க்சிஸ்டுகள் தாங்களாகவே தமிழர் தரப்பு நியாயங்களை உணர்வார்கள்…”
ஆனால் என்ன நடந்தது? காராள சிங்கம் அவ்வாறு எழுதியதற்கு அடுத்த ஆண்டே, 1964ல், எட்மண்ட் சமரக்கொடி, மற்றும் மெரில் ஃபெர்னாண்டோவை போன்ற ஒரு சிலரைத் தவிர மற்ற இடதுசாரிகள் சிங்கள இனவாதக் கொள்கைகளுக்குத் துணை போயினர். இலங்கை சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்தனர்.
1940களில் மலையகத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த அவர்கள் இப்போது அம்மக்களை அம்போவென்று கைவிட்டனர். இதன் எதிர்வினையாகத்தான் தமிழர் மத்தியில் தீவிரவாதம் ஆழமாக ஊடுருவியது.
1970ல் இலங்கை சுதந்திரக் கட்சி தலைமயிலான கூட்டணி மிகப் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தி அமைக்கவென புதிய பேரவையை உருவாக்கியபோது, பிரதமர் திருமதி சிரிமாவோ பண்டாரநாயகா கூட பாரதூர மாற்றங்களை செய்யவிரும்பவில்லை. ஆனால் இடதுசாரி ட்ராஸ்கி கட்சியைச் சேர்ந்த டாக்டர் கால்வின் ஆர் டி சில்வா எல்லாவற்றையும் ஒரேயடியாக மாற்றிவிடுவது என்பதில் பிடிவாதமாக இருந்தார். பிரதமரையும் அவர் ஒத்துக்கொள்ளவைத்தார்.
புதிய அரசியலமைப்புச் சட்டம் அதிகாரங்களை மேலும் மத்திய அரசின் கரங்களில் குவித்தது. அந்த அதிகாரங்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்க வழிசெய்யும் முன்னிருந்த ஷரத்துக்கள் நீக்கப்பட்டன. பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. சிறுபான்மையினருக்கு ஒப்புக்காகவேனும் பாதுகாப்பு வழங்கும் பிரிவு 29 கூட குப்பைக்கூடைக்குப் போனது.
முற்போக்காளர், சமூக நீதிக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஹாண்டி பேரின்பநாயகம், புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்டிருந்த பேரவைக்கு சமர்ப்பித்த மனுவில், தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதென்பதை சுட்டிக்காட்டினார்: ”ஏற்கெனவே சிங்களம் மட்டுமே நாட்டின் அதிகார பூர்வமொழியாகும் என்ற சட்டம் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியது. அதைத் தணிக்க அரசால் எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அச் சட்டம் தீவினில் இன்னொரு பெரும் மொழிப் பிரிவு வாழ்கிறது என்பதைக் கருத்தில் கொள்ளவே இல்லை. தாய்மொழிக்கு இழைக்கப்படும் அவமானம் தமிழ் இனத்திற்கு இழைக்கப்படும் அநீதியே…மக்களாட்சி என்பது ஆளப்படுவோரின் சம்மதத்துடன் நடத்தப்படும் அரசு என்ற புரிதலையே கேலிக்குள்ளாக்கியது அச் சட்டம்…”
மேலும் அவர், “முன்பு ஐக்கிய தேசியக் கட்சி பிராந்திய சட்ட மன்றங்களை உருவாக்கும் திட்டத்தை முன்வைத்தபோது, அது ஆளுங்கட்சியினரின் முன்முயற்சி என்பதாலேயே, இடதுசாரிகள் எதிர்த்தனர். இப்போதோ அவர்களே ஆட்சியிலிருக்கின்றனர்.
“இந்நிலையில் பிராந்திய அவைகள் என்றல்ல, அனைத்து தளங்களிலும் கொள்ளும் அதிகாரப் பகிர்வுக்கு வழிகோலும் சட்டங்களை நிறைவேற்ற அவர்கள் முன்வரவேண்டும்….குடிமக்கள் ஆளப்படுபவர்கள் மட்டுமே, அரசுக்குக் கீழ்ப்படிய வேண்டும், அவ்வளவுதான் என்ற நிலை நீங்கி, குடிமக்கள் தங்கள் கருத்தைத் தயங்காமல் அரசிடம் சொல்லவும், அவர்கள் சொல்வதை அரசு செவிமடுக்கச் செய்யவும் உரிய சட்டங்கள் தேவை,” என வலியுறுத்தினார்.
1955ல் இரு ஆட்சி மொழிகள் ஒரு நாடு, ஒரே ஆட்சி மொழி, இரு நாடுகள் என தீர்க்கதரிசனத்துடன் கடுமையாகவே எச்சரித்த அதே கால்வின் ஆர் டி சில்வாதான், இப்போது ஒரு மொழி சட்டத்திற்கு அரசியலமைப்புச் சட்ட அந்தஸ்தை அளிக்கிறார் என வருந்துகிறார் டாக்டர் ஜயம்பதி விக்ரமரத்னே எனும் சிங்கள நூலாசிரியர்.
ஹாண்டியின் மனுவிற்கு முன்னரே தமிழரசுக் கட்சியின் செல்வநாயகம் அரசியல் அமைப்புச் சட்டப் பேரவையிலிருந்து விலகியிருந்தார். ஆனால் அப்போது கூட அவர், ”எங்கள் கண்ணியம் காக்கவே நாங்கள் போராடுகிறோம் யாரையும் புண்படுத்தவேண்டுமென்பது எங்கள் நோக்கமல்ல,” என்று மிக சாத்வீகமாகவே குறிப்பிட்டார்.
அதிகார மமதையில் இடதுசாரிகளும் சரி, அரசுத் தரப்பில் மற்றவர்களும் சரி, தமிழர் தரப்பு ஆட்சேபணைகளையோ ஹாண்டியின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையோ எதனையும் கண்டுகொள்ளவில்லை
மலையகமக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட நிலையில் உருவான தமிழரசுக் கட்சி 1970ல் பெரும் தோல்வியை சந்தித்திருந்தது உண்மையே, நாகநாதன், அமிர்தலிங்கம் போன்றோரே தோல்வியுற்றிருந்தனர்.
sirim,avo
ஆனால் தமிழர் நலனுக்கெதிரான புதிய அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் பின் தமிழர்கள் மத்தியில் நிலை மாறியது.
சிரிமாவோ அரசோ தமிழ் அரசியல்வாதிகள் வேண்டுமானால் புதிய சட்டத்தினை எதிர்க்கலாம், ஆனால் பரந்து பட்ட அளவில் தமிழர்கள் அது நியாயமானதே என ஏற்றுக்கொள்கின்றனர் என்று சாதித்தது.
அதனுடைய பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் நோக்குடன், செல்வநாயகம் நாடாளுமன்றத்திலிருந்து ராஜினாமா செய்து, இடைத்தேர்தல் கட்டாயத்தை உருவாக்கினார். 1970ல் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் அவரும் ஒருவர்.
அவருக்கு உடல்நிலை வேறு சரியில்லை. எனவேயே உடனடியாகத் தேர்தல் நடத்துவதுதான் நியாயமாய் இருக்கும் என பலர் சுட்டிக்காட்டினர். ஆனால் தமிழ் மக்கள் மன நிலை என்ன என்பதை நன்கு உணர்ந்திருந்தது அரசு. தேர்தலை நடத்தினால் அவர் வென்றுவிடுவார், மானம் கப்பலேறும் என்பதாலேயே ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் இழுத்தடிக்க, தமிழர்கள் மேலும் மனம் கசந்தனர்.
அப்படி எத்தனை நாட்கள்தான் கடத்தமுடியும்? ஒருவழியாக பிப்ரவரி 1975ல் நடைபெற்றது தேர்தல். பெரும் வாக்குவித்தியாசத்தில் செல்வநாயகம் காங்கேசன்துறையில் வெற்றி பெறுகிறார்.
அப்போதுதான் அவர் இனி ஒரு நாடாக இருப்பதில் பொருளில்லை எனப் பிரகடனம் செய்தார். “இந்த வெற்றி தமிழர்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கிறது. நமக்கென்று ஒரு நாடு வேண்டும். இனி நம் தலைவிதியை நாம் தான் நிர்ணயித்துக்கொள்ளவேண்டும், அந்நியரல்ல. நாம் விடுதலை பெறவேண்டும்,” என்று அறைகூவல் விடுத்தார்.
அப்பின்னணியில்தான் தனி ஈழம் கோரும் வட்டுக்கோட்டை தீர்மானம் மே 1976ல் நிறைவேற்றப்படுகிறது. இலங்கையில் முக்கிய வரலாற்றுத் திருப்பம் அது.
ஹாண்டி பேரின்பநாயகமும் செல்வநாயகமும் சமகாலத்தவர்கள்தான். ஆனால் அவர்கள் அணுகுமுறைகளில், தார்மீகக் கரிசன்ங்களில் எத்தனை எத்தனை வேறுபாடுகள், முரண்பாடுகள்?
ஹாண்டி இப்படிச் செய்யாதீர்கள், அதர்மம், அநீதி என்றுதான் முறையிட்டு வந்தார், இன உணர்வுகளுக்கு தூபம் போடவில்லை.
சிங்களர்களின் மனிதாபிமானத்தை தட்டி எழுப்பமுடியும் என இறுதிவரை நம்பினார்.
“இடதுசாரிகளை நான் நன்கறிவேன். ஒரு மொழிக்கொள்கையினை அவர்கள் எதிர்த்தபோது அவர்கள் தாக்குதலுக்குள்ளாயினர். அப்போதும் உறுதியாய் நின்ற அவர்கள், இப்போது தேவைப்படும் அளவு மட்டும் தமிழைப் பயன்படுத்தலாம் என்கின்றனர். தமிழர்கள் வாழ்வை நிர்வகிக்க எவ்வளவு தமிழ் தேவை என்பதை யார் தீர்மானிப்பது? அப்படி வரையறை கூட இருக்கமுடியுமா என்ன?…” என வினவினார் அவர்.
அரசியல் அமைப்புச் சட்டப் பேரவைக்கு அவர் அனுப்பிய மனுவில், ”சிங்கள மொழி மட்டுமே நிர்வாகத்திற்கு என்ற சட்டத்தினை தமிழர் பிரதிநிதி ஒருவர் கூட ஆதரிக்கவில்லை. மக்கள் சம்மதம் இல்லாமல் என்ன வேண்டிக்கிடக்கிறது மக்களாட்சி? நாம் ஆபத்தான திசையில் பயணிக்கத் துவங்கியிருக்கிறோம்…ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல் எனப் பேசப்படுகிறது, ஆனால் வெறுப்பும் நம்பிக்கையின்மையுமே தலைவிரித்தாடுகிறது… அடங்கிக்கிடந்த வெறுப்புணர்வுகள் 1958 இனக்கலவரத்தில் பொங்கி எழுந்து ஓய்ந்துவிட்டதா? உறுதியாகச் சொல்லமுடியவில்லை…ஆனால் எனக்கு இன்னமும் நம்பிக்கையிருக்கிறது…” என்றார்.
selva
செல்வநாயகம் குடியுரிமைப் பறிப்பை வன்மையாகக் கண்டித்தபோதும் ஜனநாயக ரீதியில் அத்தகைய அத்துமீறல்களை எதிர்கொள்ள முடியும் என்று அப்போது நம்பினார்.
ஆனால் நீதிமன்றங்களும் அச்சட்டங்கள் சரியென்றபோது அவர் நொந்துபோனார். அதன் பிறகு அவர் சிங்களர்கள் மீதும், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த அமைப்புக்கள் மீதும் வைத்திருந்த நம்பிக்கையினை முற்றிலுமாக இழந்தார்.
இங்கே ஒரு சம்பவத்தை நாம் நினைவு கூறலாம். 1956ல் சிங்களம் மட்டுமே என்ற சட்டம் வந்தபோது, அரசிடம் வாதாடி சலித்துப்போன அவர், ”இவர்களிடம் தர்க்கபூர்வமாக வாதாடிப் பயனில்லை…பண்டாரநாயகா மீது சாணி எறிந்தால்தான் சரிப்படும்,” என பிரதமர் இல்லத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தபோதே, தனது சகாக்களிடம் எரிச்சலுடன் குறிப்பிட்டார்.
வங்கதேசம் உருவானதும் பெரும் எழுச்சி தமிழர்கள் மத்தியில். காங்கேசன் துறை வெற்றிக்குப்பின் இனி இணைந்து வாழமுடியாது என்று செல்வநாயகம் பிரகடனப்படுத்தியதை இளைஞர் காங்கிரஸ் கண்டித்தது. ஆனால் நிலை கைநழுவிப் போய்க்கொண்டிருந்தது.
தமிழர்களுக்கெதிரான அரசியல் அமைப்புச் சட்டம், மிகக் காலம் தாழ்த்தி நடத்தப்பட்ட இடைத்ததேர்தல், வட்டுக்கோட்டை தீர்மானம், இந்தப் பின்னணியில், 1970 தேர்தல்களில் வென்றவர்கள் தமிழர் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டனர், துரோகத்திற்கு தண்டனை மரணமே என்றெல்லாம் பேசப்பட்டது.
Alfred_Duraiappah
இலங்கை சுதந்திரக் கட்சியின் தமிழர் தலைவர்களில் ஒருவரான யாழ்ப்பாண மேயர் ஆல்ஃப்ரெட் துரையப்பாவும் அத் துரோகிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.
“கொல்லுங்கடா அவங்களை,” எனத் தெருமுனைகளில் இளைஞர்கள் குமுற, அவர்களை ஊக்குவித்தது சுதந்திரன் வார ஏடு.அது செல்வநாயகம் குடும்பத்தாரால் நடத்தப்பட்டு வந்ததாகும்.
ஆல்ஃப்ரெட் துரையப்பா ஜூலை 1975ல் கொலை செய்யப்படுகிறார். தன்னை காந்தியவாதி என்றும் வன்முறையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் சொல்லிக்கொண்டிருந்த செல்வநாயகம் அக்கொலையினை கண்டிக்க முன்வரவில்லை.
1977ல் தமிழரசுக் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனால் தார்மீகத் தளத்தில் அது தலைகுப்புற விழுந்தது.
மொழியாக்கம்: கானகன்