தமிழ்நாடு: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் படித்த ஆட்டோ ஓட்டுநரின் மகன், ஜேஇஇ-ஐ உடைத்து, ஐஐடி-மெட்ராஸில் இடம்பிடித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு இலவசமாக பயிற்சி வழங்கும் நான் முதல்வன் திட்டம் மூலம் படித்து, – JEE நுழைவுத்தேர்வில் 112 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற நிலையில், அவருக்கு ஐஐடியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. சென்னை ஐஐடியில் பிடெக் ஏரோ ஸ்பேஸ் படிப்பை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. மத்திய, மாநில அரசு வழங்கும் பொது நுழைவுத் தேர்வுகளுக்கு இலவசமாக பயற்சி அளித்து வருகிறது. ஏற்கனவே கடந்த இரு ஆண்டுகளாக அரசு பள்ளிகளிலும் இதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்புமாணவர்களுக்கு நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அவர்கள் பயிலும் பள்ளி அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக போட்டித் தேர்வுகள் எழுத ஆர்வமுள்ள மாணவர்களின் பட்டியல் தயார்செய்யப்பட்டு, ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை – தாவரவியல், கணிதம், செவ்வாய் – இயற்பியல், புதன் – விலங்கியல், கணிதம், வியாழன் – வேதியியல், வெள்ளி – மீள்பார்வை ஆகிய பாடங்களை அடிப்படையாக வைத்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாலை 4 முதல் 5.15 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது மத்திய அரசு நடத்தும் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்நிலை கல்வி நிலையங்களில், பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுநரின் மகன் பார்த்தசாரதி என்பவர் தேர்வாகி உள்ளார். இவர், அங்குள்ள ஆதிதிராவிடர் அரசு பள்ளியில் படித்து வந்த நிலையில், ஐஐடியில் சேர வேண்டும் எனற ஆசையில், நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்பட்ட பயிற்சியை பெற்று படித்து வந்து, ஜெஇஇ நுழைவு தேர்வை எழுதினார். இதில் 112 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால், அவருக்கு சென்னை ஐஐடியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. அதன்படி,. பார்த்தசாரதி, ஐஐடியில் ஏரோ ஸ்பேஸ் படிப்பை தேர்வு செய்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.