தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி – தமாகா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதம்:
“மதிப்பிற்குரிய தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களுக்கு,
வணக்கம். எனது 30.04.2016 கடிதத்தின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடுநிலையான, நேர்மையான தேர்தல் நடத்திட உடனடி நடவடிக்கைக்காக இந்தக் கோரிக்கையைத் தங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.
கடந்த 48 மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் உயர்ந்த பதவிகளில் இருக்கக்கூடிய காவல்துறையின் மூத்த மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளை அவர்கள் வகித்த பொறுப்புகளில் இருந்து விலக்கி உள்ளார்கள். டி.ஜி.பி. – சென்னை காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் ஐ.பி.எஸ்., சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜே.கே.திரிபாதி ஐ.பி.எஸ்., மற்றும் உளவுத்துறை டிஜிபி கே.எம்.சத்தியமூர்த்தி ஐ.பி.எஸ்., ஆகிய மூன்று பேரும் அவர்கள் வகித்த பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு வேறு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.
டிஜிபி கே.பி.மகேந்திரன் ஐ.பி.எஸ். தேர்தல் தொடர்பான பணிகளை கவனிப்பதற்கு முழுப் பொறுப்பு வழங்கப்பட்டு, அவர் காவல்துறை இயக்குநராகவும், டி.ஜி.பி.யாகவும் இருக்கும் அசோக்குமார் ஐ.பி.எஸ். அவர்களின் பார்வைக்கு தேர்தல் பணி தொடர்பாக எந்தவித அறிக்கையும் கொண்டுசெல்ல வேண்டியது இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2016 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரமே உள்ள நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த மூத்த அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாகவோ அல்லது முறையற்ற செயல்களில் ஈடுபட்ட காரணத்தினாலோதான் இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது தெளிவாகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் இந்தப் பணி மாற்றம் தொடர்பாக எந்தவித காரணத்தையும் தெரிவிக்கவில்லை. அது பலவிதமான ஐயங்களுக்கு இடம் அளிப்பதாக உள்ளது.
எனவே தேர்தல் ஆணையம் இதுபோன்ற மூத்த அதிகாரிகளை மாற்றுவதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும். அதைத் தெரிந்துகொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உண்டு.
ஏற்கனவே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக மிகப்பெரிய அளவில், வாகனங்களில் பணம் எடுத்துச்செல்லப்படுவதாக வந்த செய்திகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திற்கு புகார் தெரிவித்திருக்கின்றேன். இப்பொழுது இந்த அதிகாரிகள் அரசியல்வாதிகளோடு கூட்டு சேர்ந்து பணத்தை எடுத்துச் செல்வதற்கு உதவி இருப்பார்கள் என்ற சந்தேகம் எழுகின்றது.
மேலும் அண்ணா திமுகவும், திமுகவும் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதற்கு பல வகைகளில் உதவியிருப்பார்கள் என்று நம்புகிறேன். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அசோக்குமார் ஐ.பி.எஸ். தொடர்ந்து டிஜிபியாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு, அதே பொறுப்பில் தொடர்ந்துகொண்டு இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.
மேலே குறிப்பிட்ட மூன்று அதிகாரிகளின் பணி மாற்றம், தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக செயல்பட்டதால் நடந்து இருப்பின் அது அசோக்குமார் அறிவுறுத்தலின் பெயரில்தான் நடத்தை விதிகள் மீறப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறேன்.
தேமுதிக – தமாகா -சிபிஐ (எம்) – சிபிஐ – விசிக மற்றும் மதிமுக இணைந்து உருவாக்கியுள்ள மாபெரும் கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் பேராதரவு வழங்கி வருகின்றார்கள். இந்த அணி தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறும். இந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அசோக்குமார் டிஜிபி மற்றும் காவல்துறை இயக்குநர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
டிஜிபி அந்தஸ்தில் பணியில் இருக்கக்கூடிய ஐ.பி.எஸ். அதிகாரி, டிஜிபி மற்றும் காவல்துறை இயக்குநராக பணியமர்த்தப்பட வேண்டும். தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்ற பொது நோக்கோடு, நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் இந்தக் கோரிக்கை எழுப்பட்டுள்ளது. அசோக்குமார் ஐ.பி.எஸ். அவர்கள் மூத்த காவல்துறை அதிகாரிகளோடு தொடர்புகொண்டு, தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் உத்தரவிடுகின்றார். எனவே, காவல்துறை இயக்குநராக அவர் தொடர்ந்து பொறுப்பில் இருந்தால் மிகப்பெரிய முறைகேடும், அத்துமீறல்களும், வன்முறையும் சட்டமன்றத் தேர்தலின்போது நடைபெறும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இவ்வாறு இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் கடிதங்கள் அனுப்பியுள்ளேன்’’என்று குறிப்பிட்டுள்ளார்.