makkal1
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மக்கள் அதிகார அமைப்பினரை போலீசார் தடுத்ததால் எழும்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அதிமுக தவிர திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்மாக் எதிராக பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெண்கள், சமூக ஆர்வலர்கள் வரை பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். காந்தியவாதி சசி பெருமாள் பூரண மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்டபோது உயிரிழந்தார்.
இதைதொடர்ந்து டாஸ்மாக் போராட்டம் தீவிரமடைந்து சென்னை சேத்துப்பட்டு உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்த டாஸ்மாக் கடைகளை அடித்து உடைக்கப்பட்டது. டாஸ்மாக் எதிராக பாடல் பாடியதற்காக கோவனை தேச விரோத வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்கள் மீது இன்று வரை போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு அறிவித்திருந்தது. இதைதொடர்ந்து எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை சுற்றிலும் எழும்பூர் போலீசார் தடுப்புகள் அமைத்து 500க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இதனால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் 12 மணி அளவில் மக்கள் அதிகார அமைப்பை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் திடீரென எழும்பூர் வீரன் அழகு முத்துகோண் சிலை அருகே திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் டாஸ்மாக் தலைமை அலுவலகம் செல்ல முடியாத படி சாலையின் குறுக்கே தடுப்புகளை போலீசார் அமைத்திருந்தனர். ஒருகட்டத்தில் போராட்டத்தில் ஈடுபடு முயன்றவர்கள் தடையை மீறி தாளமுத்து நடராஜன் மாளிகை நோக்கி சென்றனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையும் மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் குண்ட கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் எழும்பூர் பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.