selva
புதுச்சேரி மாநில தேமுதிக பொறுப்பாளர் செல்வராஜ், அக்கட்சியிலிருந்து ஆதரவாளர்களுடன் விலகி, காங்கிரஸில் இணைந்தார்.
புதுச்சேரி மாநில தேமுதிக பொறுப்பாளர் செல்வம் (எ) செல்வராஜ். இவர், கடந்த பல ஆண்டுகளாக கட்சியின் மாநில பொறுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து தேமுதிக போட்டியிடுகிறது. தொடக்கத்தில் 10 தொகுதிகளை தேமுதிக கோரியது. கடைசியில், பேச்சுவார்த்தை இழுபறிக்குப் பிறகு 6 தொகுதிகளே ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதனால் அக்கட்சியினர் அதிருப்தி அடைந்தாலும், வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் பொறுப்பாளர் செல்வராஜ் தனது பதவியை ராஜிநாமா செய்து திங்கள்கிழமை தலைமைக்கு கடிதம் அனுப்பி விட்டார். அவர் புதுச்சேரி தேமுதிக நிர்வாகிகளை தலைமை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என புகார் கூறியுள்ளார். இதுகுறித்து செல்வராஜ் கூறியது: தமிழகத்துக்கு மட்டுமே கட்சித் தலைமை மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. நாங்கள் பல ஆண்டுகளாக புதுவையில் கட்சியை கஷ்டப்பட்டு வளர்த்தோம். ஆனால் தலைமையிடம் உரிய மரியாதை கிடைக்கவில்லை. இதனால் கட்சியில் இருந்து விலக முடிவு செய்து விட்டேன். இதற்கான கடிதத்தை தலைமைக்கு அனுப்பி விட்டேன் என்றார்.
இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு உறுப்பினர் படிவத்தை காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.நமச்சிவாயம் வழங்கினார்.