
ராஜீவ்-சோனியா தம்பதியின் மகனான ராகுல் காந்தி, தனது தாயுடன் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ராகுல் காந்தியைப்போல அவரது சகோதரியான பிரியங்காவும் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் தனது தாய் (சோனியா) மற்றும் சகோதரர் (ராகுல் காந்தி) ஆகியோர் போட்டியிட்ட தொகுதிகளில் பிரசாரத்தில் மட்டுமே ஈடுபட்ட அவர், தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார். எனினும் உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பிரியங்கா களமிறங்குவார் என யூகங்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் இறுதிநாளான நேற்று அமேதி மற்றும் கோரா பகுதிகளில் மக்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை பிரியங்கா தலைமையில் சந்திக்க வேண்டும் என ராகுல் காந்தியை மக்கள் வற்புறுத்தினர். அதற்கு பதிலளித்த அவர், ‘தீவிர அரசியலில் ஈடுபடுமாறு பிரியங்காவுக்கு நான் பலமுறை வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். ஆனால் அவர் தொடர்ந்து மறுத்து வந்தார். இதை கேட்டு கேட்டே நான் சோர்ந்து விட்டேன்’ என்றார்.
பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபடுவதை விரும்புவதாக கூறிய ராகுல் காந்தி, இது குறித்து மக்களாகிய நீங்கள் தான் அவரிடம் பேசி ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘நான் எங்கு எதை பேசினாலும் ஆர்.எஸ்.எஸ்.சும், பிரதமரும் எரிச்சலடைகிறார்கள். நீங்களே சொல்லுங்கள், இது என்னுடைய தவறா? அப்படியானால் பாராளுமன்றத்தில் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பினார்.
Patrikai.com official YouTube Channel