thoul
தொழிலாளர் தினத்தில் கூலித் தொழிலாளர்களின் வாழ்வைச் சீரழிக்கும் டாஸ்மாக் தொடர்பான உறுதிமொழி அளிக்காத அதிமுக-திமுகவிற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக் கொள்கையை முன்மொழிந்ததற்குப் பல காரணங்கள் இருந்தாலும் தொழிலாளர் வர்க்கத்தைச் சுரண்டலிலிருந்து மீட்டெடுப்பதும் முதன்மையான காரணங்களில் ஒன்றாகும். தொழிலாளர்களை முதலாளிகள் மட்டும் சுரண்டுவதாகக் கருதக் கூடாது. அரசும் பல வழிகளில் சுரண்டிக்கொண்டே வருகிறது. அதில் ஒன்றுதான் டாஸ்மாக் மதுக் கடை. சமூகத்தில் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களே மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். அப்படிப்பட்ட தொழிலாளர்களுக்கு கொடுத்த கூலியைப் பிடுங்கிக்கொள்ள அரசே மதுக் கடைகளை நடத்துகிறது. கூலித் தொழிலாளர்கள் ஆயிரக் கணக்கில் நாளெல்லாம், பொழுதெல்லாம் பாடுபட்டு பெற்ற கூலியை மதுக் கடைகளில் கொடுத்துவிட்டு சாலையில் மயங்கிக்கிடக்கும் அவலத்தை நாம் பார்க்கிறோம். மே தினத்தை முன்னிட்டாவது கூலித் தொழிலாளர்களின் நலன் கருதி டாஸ்மாக் கடைகள் தொடர்பான எந்தவித உறுதிமொழியையும் திமுக – அதிமுக கட்சிகள் தெரிவிக்கவில்லை. இதிலிருந்து மதுவிலக்குக் கொள்கையில் அவர்களின் இரட்டை வேடம் அம்பலமாகிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.
நாடே கொந்தளித்து மதுக் கடைகளை மூடச் சொல்லிப் போராடியபோது மவுனம் சாதித்து வந்த தமிழக முதல்வர் அவர்கள் தற்போது படிப்படியாக மதுக் கடைகளை மூடுவோம் என்று கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கிறார். இந்தியாவிலேயே மக்களின் உணர்வுகளை மதிக்காத ஒரு முதல்வராக தமிழக முதல்வர் திகழ்கிறார். அதனால்தான் கூட்டணி ஆட்சிக் கொள்கையை முன்னெடுத்த விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் ‘சசிபெருமாள் மது ஒழிப்பு இயக்கம்’ உருவாக்கப்படும் என உறுதியளித் துள்ளோம். அத்துடன் குடிப் பழக்கத்திற்கு ஆளானவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு, நாடு முழுவதும் குறிப்பாக, ஒன்றிய அளவிலும் தீவிர சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளோம். மேலும் மது ஆலைகள் தொடங்குவதற்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்களை உடனடியாக இரத்து செய்வதுடன், டாஸ்மாக் பணியாளர்களுக்கு தகுதிக்கேற்ற முறையில் அரசுத் துறையில் மாற்றுப் பணி வழங்குவோம் எனவும் உறுதியளித்துள்ளோம். ஆகவே, தொழிலாளர்களை ஏமாற்றி வாக்குகளை அறுவடை செய்யத் துடிப்பதுடன் மதுவிலக்குக் கொள்கையில் தெளிவற்ற நிலையிலிருக்கும் திமுக-அதிமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.