தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட ஜனநாயகத்தில் முழுமையான உரிமை இருக்கிறது. ஆனால் தமிழக பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டிருக்கிற தேர்தல் அறிக்கை தமிழகத்தில் காலம் காலமாக நிலவி வருகிற மத நல்லிணக்கத்தையும், சமூகநீதியையும் சீர்குலைத்து படுகுழியில் தள்ளுவதாக அமைந்திருக்கிறது. மத்தியில் ஆளுகிற கட்சியாக பா.ஜ.க. இருப்பதால் இதுகுறித்து எவரும் கவலைப்படாமல் இருக்க முடியாது.
ஏறத்தாழ நூறு ஆண்டுகால போராட்டத்தின் காரணமாக பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை பெறப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. சமூக, கல்வி ரீதியாகவும் பின்தங்கிய சமூகத்தினரை அடையாளம் கண்டு இடஒதுக்கீடு வழங்குவதற்கு அரசமைப்புச் சட்டம் இடமளிக்கிறது. இத்தகைய உரிமையை பறிக்கிற வகையில் தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் ‘தற்போது சலுகைப் பெறாத பிரிவிலும் கூட வறுமையில் உழல்கிறவர்களுக்கு வருமான அடிப்படையில் இடஒதுக்கீட்டுச் சலுகை வழங்க வேண்டும்” என்ற நச்சுக் கருத்தை நயவஞ்சகமாக வாழை பழத்தில் ஊசியை குத்துவது போல் துணிந்து கூறியிருக்கிறது. இது பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒட்டுமொத்தமாக விடுக்கப்பட்ட சவாலாகவே கருத வேண்டும்.
கல்வி, சமூக ரீதியாக பின்தங்கியிருக்கிற சமுதாயத்தினரை அடையாளம் கண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில்தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு உலை வைக்கிற வகையில் இடஒதுக்கீட்டில் வருமான அளவுகோலை புகுத்துவதன் மூலம் தமிழக பா.ஜ.க. யாருக்காக பேசுகிறது ? என்பதை புரிந்து கொள்ள கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. ஒருவருடைய பொருளாதார நிலை என்பது நிரந்தரமானதல்ல. ஆண்டுக்கு ஆண்டு மாறுகிற தன்மை கொண்டது. இதை வைத்துக் கொண்டு இடஒதுக்கீடு வழங்குவதற்காக கடந்த காலத்தில் பா.ஜ.க. எடுத்து தோல்வியடைந்த முயற்சியைத்தான், தற்போதுள்ள தமிழக பா.ஜ.க. தலைமை பின்பற்றி கூறியிருக்கிறது. சமூக நீதிக்கு எதிரானவர்கள் தமிழக பா.ஜ.க. தலைமையை பின்னாலே இருந்து இயக்குவதன் காரணமாகவே இத்தகைய கருத்துக்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்திருக்கின்றன. இதன்மூலம் தமிழக பா.ஜ.க. தமிழர்கள் விரோத கட்சியாகவே செயல்பட்டு வருவது நிரூபனமாகிவிட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தபோது தமிழகம் அனுபவித்து வந்த இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு பேராபத்து ஏற்பட்டபோது அதற்காக போராடியவர் தந்தை பெரியார். அதை அடிப்படையாகக் கொண்டு பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் பேசி அரசமைப்புச் சட்டத்தில் 1951 லேயே முதல் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றி, இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கு மூலவராக இருந்து செயல்பட்டவர் பெருந்தலைவர் காமராஜர். இதை எவரும் மறுத்துவிட முடியாது. இத்தகைய பின்னணி கொண்ட தமிழ் மண்ணில் பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையின் மூலம் விதைத்திருக்கிற விஷ வித்துக்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இந்த பொறுப்பு தமிழகத்தில் சமூகநீதியில் அக்கறையுள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இருக்கிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு உரிய பாடத்தை மக்கள் கற்பிப்பார்கள்.