admk
முதல்வர் ஜெயலலிதா மட்டும் தனது வேட்புமனுவை கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழக சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும் இன்று மொத்தமாக ஒரே நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர்.
முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தனது தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தை சென்னையில் கடந்த 9 ஆம் தேதி தொடங்கினார்.
இதன்பின், விருத்தாசலம், தருமபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் மற்ற வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
மதுரையில் நேற்று நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட வேட்பாளர்களுடன் சேர்த்து இதுவரை 233 வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்கள் அறிமுகம் முடிந்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வியாழக்கிழமையான இன்று, வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர். அனைத்து வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, பகல் 12 மணிக்கு மேல் அவர்கள் மனு தாக்கல் செய்கின்றனர்.
மாற்று வேட்பாளர்களாக அவர்களின் உறவுக்காரர்கள் பெயர் கண்டிப்பாக இருக்க கூடாது என்பது மேலிட உத்தரவாம். எனவே தொகுதியிலுள்ள பிர பிரபலங்களை மாற்று வேட்பாளர்களாக தயார் செய்து வைத்துள்ளனர், அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள். 227 தொகுதிகளில் அதிமுகவும் எஞ்சிய 7 தொகுதிகளில் சரத்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் போட்டியிடுகிறார்கள். இதில் ஜெயலலிதா தவிர்த்த 233 வேட்பாளர்களும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.