போக்குவரத்து விதிகளை பின்பற்ற வலியுறுத்தி ஆஸ்திரேலிய போலீசார் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில்(மீம்ஸ்) ரஜினியின் 2.0 திரைப்படத்தின் காட்சி இடம்பெற்றுள்ளது.

australia

சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் மூலம் விழிப்புணர்வு தொடர்பான செய்திகள், அன்றாடன் நிகழ்வுகள் உள்ளிட்டவைகள் பகிரப்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது. தற்போது, மக்களுக்கு பாதுகாப்பு பற்றிய கருத்துக்களையும், சாலை விதிகளை பின்பற்றுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசாரும் சமூக வலைதளங்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். சமூக வலைதளங்களில் ஒரு செய்தியை பதிவிட்டால் அது எளிதில் மக்களை சென்றடைகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள டெர்மி போலீசார், மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த மீம்ஸை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அவர்கள் பதிவிட்டுள்ள விழிப்புணர்வு மீம்ஸில் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தின் போஸ்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த விழிப்புணர்வு மீம்ஸில், “ மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டி வந்த ஒருவரை சோதித்தபோது அவரது மூச்சுக்காற்றில் 0.341 அளவிற்கு ஆல்கஹால் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த அளவிற்கு மது அருந்து விட்டு வாகனம் ஓட்டி வரும் நபர் கோமாவில் இருப்பதற்கு சமம்” என ரஜினி மற்றும் எமிஜாக்சன் அமர்ந்துக் கொண்டு பேசுவது போன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா போலீசாரால் உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு மீம்ஸில் ரஜினியின் 2.0 திரைப்பட புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டது அவரது ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருவதுடன், பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.