சிட்னி
ஆஸ்திரேலிய அரசு டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் சின் விசாவை ரத்து செய்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அகில உலக அளவில் தீவிரமாக நடந்து வருகிறது. பலரும் விரும்பி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். ஆனால் செர்பியா நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து வருகிறார். தனது உடல்நிலை காரணமாகத் தாம் தடுப்பூசி போடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா ஒப்பன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் பங்கு பெற வேண்டும் என்றால் அவர் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அளிக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தாம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் இருந்து விலக்கு பெற்றுள்ளதாகவும் அதனால் போட்டியில் கலந்துக் கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போட்டிகளில் கலந்து கொள்ள ஜோகோவிச் ஆஸ்திரேலியா வந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி உள்ளது. அவருடைய விசாவின் அடிப்படையில் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியும். இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசு அவரது விசாவை ரத்து செய்துள்ளதால் அவர் மீண்டும் தனது நாட்டுக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.