கான்பெரா, ஆஸ்திரேலியா
பந்து சேதப்படுத்திய விவகாரத்தை அடுத்து ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டிவன் ஸ்மித்தை பதவியிலிருந்து விலக்குமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
நேற்று நடந்த ஆஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் போட்டியின் போது ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பந்தைக் கீறி சேதப்படுத்தியது தொலைகாட்சியில் தெரிய வந்தது. அதையொட்டி பந்து வீச்சாளர் பான்கிரோப்ட் மற்றும் அணித்தலைவர் ஸ்டிவன் ஸ்மித் ஆகியோர் அவ்வாறு நிகழ்ந்துள்ளதை ஒப்புக் கொண்டனர். இது விளையாட்டு ரசிகர்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலியா அரசு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், அணித்தலைவர் பதவியில் இருந்து ஸ்மித் விலக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் மால்காம் டர்ன்புல், “இது ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வாகும். தென் ஆப்ரிக்காவில் நிகழ் தன் இந்த நிகழ்வால் நாங்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளோம்.
இதனால் ஒட்டு மொத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கே மோசடியில் ஈடுபடுபவர்கள் என்னும் கெட்ட பெயர் கிடைத்துளது. நான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் டேவிட் பீவருடன் பேசி உள்ளேன். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அணித்தலைவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளேன்.” எனக் கூறி உள்ளார்.