டவுன்ஸ்விலே, ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் கடும் வெள்ளம் காரணமாக அடித்து வரப்பட்ட முதலைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு உண்டாகி இருக்கிறது. வழக்கமாக பெய்யும் மழையைப் போல் பல மடங்கு பெய்துள்ளதால் அணைகள் நிரம்பி வழிகின்றன. அணையில் வழக்கமாக உள்ள நீரைப்போல் இரு மடங்கு நீர் நேற்று காணப்பட்டதால் அணை திறக்கப்பட்டு டவுன்ஸ்விலே நகரில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் ஏராளமான முதலைகள் அடித்து வரப்பட்டுள்ளன. அவைகள் டவுன்ஸ்விலே நகரில் பல குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளன. அதை ஒட்டி அரசு அதிகாரிகள் நகர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பல இடங்களில் சாலைகளில் முதலைகள் சர்வ சகஜமாக உலவுவதை காண முடிகிறது.
பல இடங்களில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலைகள் மரங்களில் ஏறி வசிக்க தொடங்கி உள்ளன. இதை எரின் ஹான் புகைப்படங்களாக எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார். ஒரு சில இடங்களில் பாம்புகளும் ஆற்றில் நீச்சல் அடித்தபடி காணப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த மழை மேலும் வலுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெள்ளம் அதிகரிக்கும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Photo courtesy : Facebook page of ERIN HAHN