கேப்டவுன், தென் ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலிய வீரர் பான்கிரோப்ட் பந்தை சுரண்டியதை அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பான்கிரோப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டுள்ளனர்.
நேற்று கேப்டவுனில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பப் பட்டது. வழக்கமாக பந்து வீசும் கிரிக்கெட் வீரர்கள் பந்து வேகமாக செல்ல தங்களது உடைகளில் தேய்ப்பது மற்றும் கைகளால் தடவுவது போன்றவைகளை செய்வார்கள். சிலர் பந்தில் தங்கள் உமிழ் நீரை தெளித்து அதை பளபளப்பாக்குவதும் உண்டு.
நேற்றைய போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் பான்கிரோப்ட் பந்து வீசுவது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அப்போது அவர் தனது பாக்கெட்டில் இருந்து மஞ்சள் நிறம் கொண்ட பொருள் ஒன்றை எடுத்து தான் வீச இருந்த பந்தை சுரண்டுவது தெரிய வந்தது. அதை யாருக்கும் தெரியாமல் உடையில் தேய்ப்பது போல் செய்து விட்டு பந்தை வீசியது பார்வையாளர்களுக்கு தெரிய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த செய்கையை பத்திரிகையாளர்களிடம் கிரிக்கெட் வீரர் பான்கிரோப்ட் மற்றும் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஒப்புக் கொண்டுள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஷேன் வார்ன் மற்றும் கிரீம் ஸ்மித் “இதில் கிரிக்கெட் வீரர் மற்றும் அணித்தலைவர் மட்டும் இன்றி பயிற்சியாளர் டாரெனுக்கும் பங்கு உண்டு” என கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் கிரீம் ஸ்மித் தனது வர்ணையின் போது , “பான்கிரோப்ட் ஒரு மஞ்சள் நிறப்பொருளை எடுத்து பந்தை சுரண்டுகிறார். அவருக்கு ஏதோ எச்சரிக்கை வந்த பின் அதை திரும்ப பாக்கெட்டில் போடுகிறார். அதன் பிறகு மேலும் ஏதோ தகவல் வந்ததால் அதை தனது கவட்டைக்குள் மறைக்கிறார். ஆனால் இப்போது அவர் மறைத்தும் முதலில் எடுத்ததும் வேறு வேறு பொருட்கள் போல உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்
மேலும், ”இது குறித்து உடனடியாக அணித் தலைவர் மட்டும் இன்றி பயிற்சியாளரையும் விசாரிக்க வேண்டும். அனைவரும் திட்டமிட்டு இந்த செயலை நடத்தி இருக்க வேண்டும். இதில் அணியின் வீரர் தெரியாமல் செய்ததாக சொல்ல முடியாது. அவர் ஏற்கனவே 7 அல்லது 8 டெஸ்ட் பந்தயங்களில் கலந்துக் கொண்டவர். எனவே இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.