சிட்னி: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்துள்ளது.
துவக்க வீரர் மேத்யூ வேட் 32 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள் & 3 பவுண்டரிகளுடன் 46 ரன்களை அடித்தார். ஆர்கி ஷார்ட் 9 ரன்களில் அவுட்டானார்.
கிளென் மேக்ஸ்வெல் 13 பந்துகளில் 22 ரன்களை எடுத்து அவுட்டானார். ஹென்ரிக்யூஸ் 18 பந்துகளில் 26 ரன்களை அடித்தார். கடைசி கட்டத்தில் ஸ்டாய்னிஸ் 7 பந்துகளில் 16 ரன்களையும், டேனியல் சாம்ஸ் 3 பந்துகளில் 8 ரன்களையும் அடிக்க, கூடுதலாக 9 ரன்கள் கிடைக்க, ஆஸ்திரேலிய அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை சேர்த்தது.
இந்திய தரப்பில் நடராஜன் மட்டுமே சிறப்பாக பந்துவீசினார். அவர் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார். தீபக் சஹார் 4 ஓவர்களில் விக்கெட்டுகள் இன்றி 48 ரன்களை வாரி வழங்கினார்.
வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் விக்கெட் இன்றி 35 ரன்களையும், ஷர்துல் தாகுர் 4 ஓவர்களில் 1 விக்கெட் எடுத்து 39 ரன்களையும், சாஹல் 4 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே எடுத்து 51 ரன்களையும் வழங்கினர். முந்தையப் போட்டியில் எடுபட்ட சாஹலின் பந்துவீச்சு இன்று எடுபடாமல் போனது. ஆனால், கடந்தப் போட்டியைப் போலவே, இன்றும் ஸ்மித்தின் விக்கெட் இவருக்கு கிடைத்தது.
இந்த இலக்கை எட்டுவதற்கு, இந்திய அணியில் யாரேனும் இருவர் அதிரடி இன்னிங்ஸை ஆடியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.