லண்டன்: ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட்டில், இங்கிலாந்தை 185 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றது ஆஸ்திரேலியா.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ஸ்மித்தின் இரட்டை சத உதவியுடன், முதல் இன்னிங்ஸில் 497 ரன்களை குவித்தது.
ஆனால், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியால் 301 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பர்ன்ஸ் 81 ரன்களும், ஜோ ரூட் 71 ரன்களும் எடுத்தனர். பென் ஸ்டோக்ஸால் எடுக்க முடிந்தது 26 ரன்கள் மட்டுமே.
பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மட்டுமே 82 ரன்கள் அடித்தார். மேத்யூ வேட் 34 ரன்கள் எடுக்க, 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி. இங்கிலாந்திற்கு 383 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
சற்று சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோ டென்லி மட்டுமே அரைசதம் அடித்தார். ஜாஸ் பட்லர் 34 ரன்களையும், ஜேஸன் ராய் 31 ரன்களையும் அடிக்க வேறு யாரும் 30 ரன்களைக்கூட தொடவில்லை.
கடந்த டெஸ்ட்டின் ஹீரோவாக திகழ்ந்து இங்கிலாந்திற்கு வெற்றியை தேடிக் கொடுத்த பென் ஸ்டோக்ஸ் இந்தமுறை எடுத்த ரன்கள் வெறும் 1. முடிவில் 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 185 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் மற்றும் லயன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.