லார்ட்ஸ்: ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், 86 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது ஆஸ்திரேலியா.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில், உஸ்மான் குவாஜாவும் (88), அலெக்ஸ் கேரியும் (71) மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர்.

வேறு யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. டேவிட் வார்னர் 16 ரன்களுக்கும், கேப்டன் ஃபின்ச் 8 ரன்களுக்கும் அவுட்டாகினர். அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், ஃபெர்குஸன் மற்றும் நீஷம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், 244 ரன்களை இலக்காக வைத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, கேன் வில்லியம்சன் அடித்துக் கொடுத்த 40 ரன்கள்தான் மிக அதிகபட்ச ரன்கள். ராஸ் டெய்லர் 30 ரன்களும், குப்தில் 20 ரன்களும் அடித்தனர். மொத்தத்தில் அந்த அணி வெறும் 157 ரன்களுக்கு சுருண்டு விட்டது. உலகக்கோப்பை தொடரின் துவக்கத்தில் நியூலாந்து அணி ஒரு வலுவான அணியாக மதிப்பிடப்பட்டது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல நிலைமைகள் மாறி வருகின்றன.

ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், ஜேஸன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியா புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.