ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமைக்காக காத்திருந்த நோவோக் ஜோகோவிச் நீதிமன்ற உத்தரவு காரணமாக நேற்றிரவு ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறினார்.

இரண்டு டோஸ் முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியும் என்ற உத்தரவு இருக்கும் நிலையில் மருத்துவ காரணங்களுக்காக தான் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று கூறி விலக்களிக்க கேட்டிருந்தார் ஜோகோவிச்.

முதலில் இவருக்கு விசா வழங்கிய ஆஸி. அரசு பின்னர் மெல்போர்ன் விமான நிலையம் வந்திறங்கியதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய தடை விதித்தது.

இதனை எதிர்த்து நீதிமன்றம் சென்ற ஜோகோவிச் எந்த மருத்துவ காரணங்களுக்காக விலக்கு கேட்கிறார் என்பதற்கான ஆதாரத்தை வழங்க முடியாததால் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய மூன்றாண்டுகள் தடையோடு உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

அவரை வெளியேற்றிய ஆஸி. அரசுக்கு செர்பியா கடும் கண்டனம் தெரிவித்தது, தவிர ஆஸி. எதிர்கட்சியினரும் பிரதமர் மோரிசன் மீது குற்றம் சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து, ஜோகோவிச் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய மூன்றாண்டுகள் காத்திருக்க தேவையில்லை என்றும் சூழ்நிலையைப் பொறுத்து அவருக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோரிசன் கூறியுள்ளார்.

இதனால் அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.