‘அரோரா ஸ்பேஸ் ஸ்டேஷன்’: விண்வெளி ஹோட்டலுக்கு செல்ல முன்பதிவு தொடங்கியது

நியூயார்க்:

விண்வெளியில் கட்டமைக்கப்பட்டு வரும் அரோரா விண்வெளி  ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிடு வதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.  ஒரு நாளுக்கு சுமார் 5 கோடி ரூபாய் செலவாகும் என கூறப்பட்டுள்ளது.

பூமிக்கு வெளியே விண்வெளியில் மக்கள் பயன்பாட்டிற்காக அரோரா ஸ்டேஷன் என்ற சொகுசு ஹோட்டல் கட்ட ஓரியன் ஸ்பேன் நிறுவனம் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகள்  2021-ம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஓட்டலில் தங்கி உணவு அருந்த முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டலில் 2022-ல் இருந்து மக்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று, பூமியில் இருந்து தக்க பயிற்சி கொடுக்கப்பட்ட பின் மனிதர்கள் இந்த ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் இயங்கும் ராக்கெட் வடிவமைக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அரோரா ஸ்பேஸ் ஸ்டேஷன் பெரிய ஜெட் ராக்கெட் போல இருக்கும் என்றும்,  இதன் நீளம் 43.5 அடியும், அகலம் 14.1 அடியும் இருக்கும். இதன் கொள்ளளவு 5,650 கன அடி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது மக்கள் தங்குவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அமைக்கப்பட உள்ளது. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் ”ஓரியன் ஸ்பேன்” நிறுவனத்தின் அலுவலகமும் கட்டப்பட உள்ளது.

இதில் 6 பயணிகள் மற்றும் 2 அதிகாரிகள் ஒரே சமயத்தில் தங்க முடியும். சாதாரண பூமியில் இருக்கும் பகுதி போலவே இதில் செயற்கை புவியீர்ப்பு விசை உருவாக்கப்பட்டு இருக்கும். பொதுவாக விண்வெளி பயணத்தின்போது, விஞ்ஞானிகள் மிதப்பது போன்று இதில் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த உணவகத்தில் விருந்தினர்கள் 12 நாட்கள் வரை தங்கலாம். மேலும் சூரியன் உதிப்பது மற்றும் மறைவது போன்ற நிகழ்வுகளையும் விருந்தினர்கள் நேரடியாக பார்க்க முடியும்.

இந்த விண்வெளி அரோரா ஸ்டேஷன் ஹோட்டலில் தங்கி உணவு சாப்பிடுவதற்கான முன்பதிவை, தற்போது ஓரியான் ஸ்பேன் நிறுவனம் ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது.

விண்வெளி உணவகத்திற்கு செல்ல விரும்புவோர் 80,000 அமெரிக்க டாலர்களை முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என ஓரியான் ஸ்பேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓரியான் ஸ்பேன் நிறுவனத்தின் விண்வெளி உணவகத்தில் தங்க தனிநபருக்கு ஒரு நாளுக்கு 5 கோடி ரூபாய் வரை செலவு ஆகும் என தெரிகிறது. தவிர, இந்த பயணத்திற்கு தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு விருந்தினர்க ளுக்கும் சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
English Summary
'Aurora Space Station': A luxury space hotel is now taking reservations