பாங்காங்

மியான்மார் முன்னாள் அதிபர் ஆங் சான் சூகிக்கு 2 வழக்கில்  4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் மியான்மார் நாட்டில் நடந்த பொது தேர்தலில் ஆங் சா்ன் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி கூட்டணிக் கட்சி மீண்டும்  வெற்றி பெற்றது. அவருக்கு எதிராக ராணுவத்தின் ஆதரவுடன் போட்டியிட்ட கட்சிகள் தோல்வியைத் தழுவின.  கடந்த பிப்ரவரி மாதம் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந் நிலையில் மியான்மாரில் ராணுவ புரட்சி ஏற்பட்டது.

இதில் தேசிய ஜனநாயக கட்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதோடு அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.  இதைத் தொடர்ந்து ஓராண்டு ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும்  தேர்தல் பிரசாரத்தின்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மீறியது, பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் தவறான மற்றும் எரிச்சலூட்டும் தகவல்களைப் பரப்பியது, முறைகேடு, ஊழல் என சூகி மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

வழக்குகள் தொடர்பான விசாரணை தனித்தனியாக நடந்து வந்தது.  இதில் பொது மக்களைத் தூண்டி விடுதல் மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியது தொடர்பான இயற்கை பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறிய வழக்கில் நேற்று மியான்மார் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. இவ்விரு வழக்கிலும் தலா இரண்டு ஆண்டுகள் என ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   அவர் தொடர்ந்து 4 ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்படுவாரா அல்லது சிறையில் அடைக்கப்படுவாரா என்பதை நீதிமன்றம் இன்னும் தெளிவாக உறுதி செய்யவில்லை.