சென்னை: ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை உள்பட மாநிலம் முழுவதும் விமான நிலையங்கள், ரயில் நிலையம், கோட்டை கொத்தளம், பேருந்து நிலையங்கள் என மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. . சென்னை முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆக.20 நள்ளிரவு வரை 7 அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். உள்நாட்டு விமான பயணிகள் ஒன்றரை மணி நேரமும், சர்வதேச விமான பயணிகள் மூன்றரை மணி நேரமும் முன்னதாகவும் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், விமான பயணிகள் திரவப் பொருட்கள், ஜாம், அல்வா, ஊறுகாய் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கபப்ட்டுள்ளது.
சென்னையில் உள்ள ரயில் நிலையம். பஸ் நிலையங்கள், என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தனியார் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.