சென்னை
குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்து குறித்து விசாரணை நடத்த அதுல்யா மிஸ்ரா ஐ ஏ எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஞாயிறு அன்று காட்டுத் தீயில் சிக்கி 11 பேர் மரணம் அடைந்தனர். மேலும் பலர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள் அனுமதியின்றி மலையேற்றத்தை மேற்கொண்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தமிழக அரசு இந்த காட்டுத் தீ விபத்து குறித்து விசாரிக்க ஒரு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “குரங்கணி மலைப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது குறித்தும், மலையேற்றம் சென்றவர்கள் விதிகளை மீறி மலை ஏறி உள்ளார்களா என்பது குறித்தும் விசாரிக்க ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதை ஐஏஎஸ் அதிகாரியான அதுல்யா மிஸ்ரா விசாரிப்பார். இது போன்ற விபத்துக்களை வருங்காலத்தில் எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் அவர் இரண்டு மாதத்துக்குள் அறிக்கைகள் வழங்குவார்.” என கூறப்பட்டுள்ளது.