சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்ததால் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். அதுகுறித்து விவாதிக்க கோரினால், எங்களை எங்களை அடக்கி ஒடுக்க முயற்சிக்கின்றனர். சபாநாயகரின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது, இதற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக கூறினார்.
தமிழ்நாட்டில் தான் அதிக இளம் வயது விதவைகள் இருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி பேசியிருந்தார். ஆனால், தற்போது அவர் வாயே திறக்கவில்லையே ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
இன்று சட்டப்பேரவை கூடியதும், அதிமுக எம்எல்ஏக்கள், கேள்வி நேரத்தை ஒதுக்கிவைத்துவிட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்கவே எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் சபையில் அமளி நிலவியது. இதையடுத்து, அவைக்காவலர்கள் மூலம் அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து அவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் பிரச்சினை குறித்து அவையில் விவாதிக்க மறுக்கப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது இருப்பது திறமையற்ற அரசாங்கம். இந்த திறமையற்ற அரசாங்கத்தால் கள்ளச்சாரம் அருந்தி பலர் உயிரிழந்து வருகின்றனர். மக்கள் நடமாடும் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வந்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. அதுபோல கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு போதி மருந்துகள் மருத்துவமனையில் இல்லை. அதை நாங்களே நேரடியாகவே கண்டோம் என்றவர், கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி வில வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசியவர், இதுகுறித்து அவையில் பேசய வலியுறுத்திய எங்களை பேரவை தலைவர் வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றி விட்டார். சபாநாயகரின் செயல் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது அதுபோல, எதிர்க்கட்சி துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. எங்களை அடக்கி ஒடுக்க முயற்சித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என ஆவேசமாக கூறினார்.
மக்கள் சார்பிலான எங்களது கேள்வ்களை எதிர்கொள்ள முடியாத முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அவைக்கு கூட வரவில்லை என குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட இடத்தில் ஆளும் கட்சி போட்டோ ஒட்டப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் நடமாடும் மையப்பகுதியில் மூன்றாண்டு காலம் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர்; கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவோர் குறித்து உரிய தகவல் இல்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து சட்டமன்றத்தில் நியாயம் கிடைக்கவில்லை; சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட்டு இருக்க வேண்டும்.
தூத்துக்குடியில் இரண்டு பேர் இறந்ததற்கே சிபிஐ விசாரணையை திமுக கோரியது. ஆனால், தற்போது 50 பேர் வரையில் இறந்துள்ளனர். இதில் சிபிஐ விசாரணையை கோருவதில் என்ன தவறு. விசாரணையை கோரியதற்கே உதயகுமார் மீது கைது நடவடிக்கை பாய்கிறது. அப்படி இருக்கையில் இவர்களது விசாரணை நேர்மையாக இருக்குமா? என கேள்வி எழுப்பியவர்,
இந்த விஷயத்தில் உண்மை செய்தியை ஆட்சியர் வெளியிட்டிருந்தால் உயிரிழப்புகளை குறைத்திருக்கலாம் விஷ சாராய உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே முழு பொறுப்பு அழுத்தத்தின் பேரிலேயே ஆட்சியர் தவறான தகவலை பேட்டியில் கூறியுள்ளார்.
மருத்துவர்கள், மருந்துகள் போதிய அளவில் இருப்பு இருப்பதாக கூறியது பச்சைப்பொய் என்று கூறிய ஈபிஎஸ், இந்த சாராய சாவு குறித்து திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் குரலெழுப்பாதது கண்டிக்கத்தக்கது. இந்த விவாகரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் அதிமுக நிவாரணம் மக்களின் பிரச்சினைகளை பேசத்தான் எதிர்க்கட்சி. அது எங்களது கடமை 2023ல் நடந்த சம்பவத்தில் இருந்து தமிழக அரசு பாடம் கற்கவில்லை. மீண்டும் நடந்துள்ளது வரும் 24ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது, தமிழ்நாட்டில் தான் அதிக இளம் வயது விதவைகள் இருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி பேசியிருந்தார். ஆனால், தற்போது அவர் வாயே திறக்கவில்லையே ஏன் என்றும் கேள்வி எழுப்பினார் எடப்பாடி பழனிசாமி.
இதற்கிடையில் பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றிய நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தனர். முன்னதாக அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் வெளிநடப்பு செய்திருந்தனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்! சவுக்கு சங்கர் முழக்கம்