இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் குற்றமற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலைக்கு முயற்சிப்பது குற்றமல்ல என்ற சட்டம் 2017ம் ஆண்டு மே 29ம் தேதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஒருவருடம் கடந்த நிலையில் சுகாதார அமைச்சகம் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதிக மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயற்சிப்பது ஐபிசி விதிகளின் கீழ் கொண்டுவர முடியாது என மத்திய சுகாதார அமைச்சர் JP நட்டா கடந்த வருடம் மக்களவையில் தெரிவித்தார். மனநல நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அதிக மன அழுத்தம் காரணமாக செய்யும் தவறுகள் குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் நட்டா குறிப்பிட்டுள்ளார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், வயதானவர்களுக்கு மயக்க மருந்து மற்றும் அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் எனவும் இந்த சட்டத்தில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. இந்த அமைப்பில் ஈடுபடும் தன்னார்வலர்கள் உரிய மருத்துவர்களின் ஆலோசனை படி தங்களை ஈடுபடுத்தி கொள்ளவும் சட்டம் வழிவகை செய்துள்ளது. இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 6-7 சதவிகிதத்தினர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 1-2 சதவிகிதத்தினருக்கு நோயின் தீவிரம் அதிகம் உள்ளது எனவும் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் சுகாதாரம் மற்றும் மறுவாழ்வு அளிக்க இந்த சட்டம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.