டெல்லி: பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய தேர்தல் ஆணைய நடவடிக்கையை  எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.  சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் “ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்”  என கூறி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அகதிகளாக தஞ்சம் அடைந்த வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பல மாநிலங்களில், மாநில அரசு வாக்குரிமை வழங்கி வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் தீவிர சீரமைப்பு பணிகளை முன்னெடுத்து வருகிறது. முதற்கட்டமாக  பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR)  நடைபெற்று வருகிறது. இதன்மூலம் பல லட்சம்  போலி வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளனர். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ஒரு மோதல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணைய நடவடிக்கை, ஆபரேசன் சிந்தூர் உள்பட பல நிகழ்வுகளை சுட்டிக்காட்டி இரு அவைகளிலும் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. இதை ஏற்க மத்தியஅரசு மறுத்து வருவதால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு அவையை முடக்கி வருகின்றனர்.

இந்த நிலையில்,  பீகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்ததை கண்டித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சோனியா காந்தி தலைமையில், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மத்தியஅரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை  “ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” என்றும்  SIR நடைமுறையை திரும்பப் பெறுமாறும் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.