சென்னை: வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிவ ருகிறது. இதன் தாக்கத்தால் மத்திய மற்றும் மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம் அதன் காரணமாக,  தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத் தெரிவித்து உள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம்  ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் அறிவித்திருக்கிறது.

கடந்த இரு நாட்களாக சென்னை உள்பட பல பகுதிகளில் ஆங்காங்கா மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது,  “மத்திய மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதேபோல, மியான்மர் கரைக்கு அப்பால், வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது.

இந்த இரு சுழற்சிகளின் தாக்கத்தால், மத்திய மற்றும் மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக,  தமிழகத்தின் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.. இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலைமை, வரும் 28 வரை தொடரவும் வாய்ப்புள்ளது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் செப்டம்பர் 25ம் தேதி வரை மணிக்கு அதிகபட்சமாக 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்

இதுகுறித்து  இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று ( செப் -23ம் தேதி) மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இதனால், இன்று முதல் வரும் 28-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்’

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.