சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இரு இடங்களில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து  இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இரு வேறு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மன்னார் வளைகுடா பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென் கிழக்கு அரப்பிக்கடலை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், ஏற்கனவே உருவான  ‘புரெவி’ புயல்  படிப்படியாக வலுவிழந்து மன்னார் வளைகுடா பகுதியில் நகராமல் நிலைகொண்டிருந்தது. இது தற்போது வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டிருக்கிறது. புரெவி புயல் வலு குறைந்தாலும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம். புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெய்த மழை அளவு விவரம்: கலசபாக்கம் 7 செ.மீ., ஒட்டன்சத்திரம், கடலூர் 6 செ.மீ., திருக்கழுக்குன்றம், நெய்வேலி, வந்தவாசி, காட்டுமன்னார் கோவில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு கூறியுள்ளது.