சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது,
“குமரிக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள இலங்கைக் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டம் மணப்பூண்டியில் 17 செ.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் இரு தினங்களைப் பொறுத்தவரையில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களான விழுப்புரம், புதுவை, கடலூர், நாகை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில் கடந்த அக்டோபர் 1ந்தேதி முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெய்துள்ள மழையின் அளவு 452 மி.மீ. இந்த காலத்தின் இயல்பு அளவு 419 மி.மீ. இது இயல்பைவிட 8% அதிகம்.
சென்னையைப் பொறுத்தவரையில் வடகிழக்குப் பருவமழையில, இன்று வரை பெய்துள்ள மழையின் அளவு 1,034 மி.மீ. இந்தக் காலத்தின் இயல்பு அளவு 734 மி.மீ. இது இயல்பைவிட 41% அதிகம்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை.
இவ்வாறு கூறினார்.