லக்னோ:
ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க கோச்சிங் நடத்திய பீகாரைச் சேர்ந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையப் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் இருந்து ரூ.39.58 லட்சத்தை திருடியதாக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.9.13 லட்சத்தை காவல்துறையினர் மீட்டிருந்தாலும், இந்த கும்பலின் தலைவரான மிஸ்ராவை கைது செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
பீகாரின் சப்ராவைச் சேர்ந்த சுதிர் மிஸ்ரா என்பவர் ‘ஏடிஎம் பாபா’ என்று அழைக்கப்படுகிறார். 15 நிமிடங்களில் ஏடிஎம்களை எப்படி உடைப்பது என்று வேலையில்லாத இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்ததன் மூலம் அவர் அந்தப் பெயரைப் பெற்றுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சப்ராவில் சுதிர் மிஸ்ராவிடம் மூன்று மாத கோர்ஸ் படிப்பைப் பெற்றிருக்கிறார்கள். அந்த மூன்று மாத கால படிப்பில் ஏடிஎம்மை விரைவாக எப்படி உடைப்பது, கேமராக்கள் முன்னும் ஏடிஎம் உள்ளேயும் தங்கள் அடையாளங்களை மறைக்கவும், ஏடிஎம்மில் உள்ள பணப்பெட்டியை உடைத்து, 15 நிமிடங்களுக்குள் பணத்தை எடுத்துக்கொண்டு எப்படி வெளியேறுவது என்றும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
பயிற்சிக்குப் பிறகு 15 நாட்கள் நேரடி செயல் விளக்கமும் நடத்தப்படுகிறது. மேலும் 15 நிமிடங்களுக்குள் ஏடிஎம்மை உடைக்கும் இளைஞர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுவார்கள். மிஸ்ரா பல்வேறு மாநிலங்களில் இருந்து வேலையில்லாத இளைஞர்களை வேலைக்கு அமர்த்துகிறார் என்பதும் கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் விசாரித்ததில் தெரிய வந்துள்ளது. லக்னோவில் உள்ள ஏடிஎம்மில் கொள்ளையில் ஈடுபட்டபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை நடந்த பின் இவர்களை கைது செய்ய பல்வேறு சிசிடிவி கேமிராக்கள், லக்னோவைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட டோல்களை சுற்றிலும் சோதனை செய்தனர்.
காவல்துறையினரின் தொடர் விசாரணையில், கொள்ளை அடிக்கப்பட்ட ஏடிஎம் அருகே உள்ள வீட்டில் இருந்து சிசிடிவி காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் பலகட்ட முயற்சிகளுக்கு பின் சிசிடிவியில் இருந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது.