மீண்டும் அமலாகும் ஏ டி எம் கட்டணங்கள்
மார்ச் 25-ஆம் தேதியில் கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு ஏற்படும் கடுமையான நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, வங்கிக் கடன் செலுத்துவதில் கால அவகாசம், ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கூடுதல் கட்டணம் ரத்து உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ரிசர்வ் வங்கி அளித்திருந்தது.
தற்போது கொரோனா ஊரடங்கு தளர்ந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் இனி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு  வாடிக்கையாளர்கள் வழக்கம் போலக் கட்டணம் செலுத்தியாக வேண்டும்.  இந்த விதிகள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஊரடங்கு காலத்துக்கு முன்னர் இருந்த அதே விதிமுறைகள் மீண்டும் அமலுக்கு வருகின்றன. அதாவது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு எந்தெந்த வங்கிகள் எவ்வளவு கட்டணம் வசூலித்தனவோ, அதே கட்டணம் ஜூலை 1 முதல் மீண்டும் வசூலிக்கப்படும்.
அதாவது, அதே வங்கியின் ஏடிஎம்மில் 5 முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் இலவசமாகப் பணம் எடுத்துக்கொள்ளலாம்.  அதன் பின்னர் எடுக்கும் பணத்துக்கு ஒரு முறைக்கு ரூ. 17 முதல் ரூ. 23 வரை கட்டணமாக வசூலிக்கப்படும். அதோடு ஜிஎஸ்டியும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. பணமில்லாத இதர பரிவர்த்தனைகளுக்கு ரூ.8 மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூல் செய்யப்படுகிறது.
இனி பொதுமக்கள் ஏடிஎம்களை உபயோகிக்கும் முன்னரே தெளிவாகத் திட்டமிட்டுக்கொள்வது தேவையற்ற பண இழப்பினை தவிர்க்க உதவும்.
– லெட்சுமி பிரியா